2013-12-16 16:05:00

சோகமாக இருக்கும் மக்களின் சரணாலயம் கத்தோலிக்கத் திருஅவை அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.16,2013. கத்தோலிக்கத் திருஅவை, சோகமாக இருக்கும் மக்களின் சரணாலயம் அல்ல என்றும், கடவுள் நம்மை விரும்பித் தேடிவந்து அன்பு செய்கிறார் என்பதில் அடங்கியுள்ள மகிழ்வே நற்செய்தி சொல்லும் மகிழ்வு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருவருகைக் காலத்தில், 'மகிழும் ஞாயிறு' என்று அழைக்கப்படும் மூன்றாம் ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, கிறிஸ்தவ மகிழ்வை தன் சிறு உரையின் மையமாக்கினார்.
தங்கள் இல்லங்களில் அலங்கரிக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்படவிருக்கும் குழந்தை இயேசு திரு உருவத்தை, மகிழும் ஞாயிறன்று, குழந்தைகள் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்குக் கொணர்ந்து, திருத்தந்தையின் ஆசீரைப் பெறுவது வழக்கம்.
இந்த வழக்கத்தையொட்டி, வளாகத்தில் கூடிவந்திருந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளையும், அவர்கள் கொணர்ந்திருந்த குழந்தை இயேசுவின் திரு உருவையும் அசீர்வதித்தத் திருத்தந்தை, தான் அவர்களை, குழந்தை இயேசுவிடம் நினைவுகூர்வதுபோல், அவர்களும் தன்னை நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாம் எவ்வளவுதான் வலுவற்றவர்களாக இருந்தாலும், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உயர்ந்த எண்ணம் நம்மை வாழ்வில் உந்தித் தள்ளவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது தோல்விகளைக் கண்டு மனம் தளர்ந்து போகும்போது, இறைவனை விட்டு நாம் விலகிச் செல்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பெய்த மழையிலும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையைக் கேட்க வந்திருந்த பக்தர்களின் நல்ல மனதைப் புகழ்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.