2013-12-13 15:31:17

திருத்தந்தை பிரான்சிஸ்: மகிழ்வற்ற கிறிஸ்தவர்களே இறையுண்மையைப் போதிப்பவர்களைக் குறைகூறுபவர்கள்


டிச.13,2013. மகிழ்வற்ற கிறிஸ்தவர்கள் இறையுண்மையைப் போதிப்பவர்களைக் குறைகூறுகின்றனர், ஏனெனில் தூய ஆவிக்குத் தங்கள் மனக்கதவுகளைத் திறப்பதற்கு இவர்கள் அஞ்சுகின்றனர் என்று, இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவெளிப்பாட்டின் உண்மையை ஏற்கிறேன், ஆனால் போதிப்பவரையோ போதனையையோ ஏற்க முடியாது என்று சொல்லும் “மகிழ்வற்ற”, தங்களுக்குள்ளே “முடங்கிக்கிடக்கும்” கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்போம் என, இம்மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை.
எப்பொழுதும் மகிழ்வற்று இருந்த, மகிழ்வோடு விளையாடத் தெரியாத, பிறரின் அழைப்பை எப்பொழுதும் மறுத்த பிள்ளைகளுக்குத் தனது காலத்துத் தலைமுறைகளை ஒப்பிட்டுப் பேசிய இயேசுவின் அருள்பொழிவை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், மகிழ்வற்ற கிறிஸ்தவர்கள் பற்றி விளக்கினார்.
இந்த மக்கள், இறைவார்த்தைக்குத் திறந்தமனதாய் இல்லாதவர்கள், அவர்கள், அனுப்பப்பட்டவரைப் புறக்கணித்தவர்கள், பரிசேயர்கள், அரசியல் தளத்தில் உள்ளவர்கள், சதுசேயர்கள் போன்று இவர்கள் ஓர் அமைப்புமுறையில் அடைக்கலம் தேடியவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
இவர்கள், தங்களின் கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும் அடைப்பட்ட வாழ்வு வாழ விரும்புகின்றவர்கள் என்றுரைத்த திருத்தந்தை, இந்த மகிழ்வற்ற கிறிஸ்தவர்கள் தூய ஆவியில் நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களை எச்சரிக்கும் போதனைகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரத்தை நம்பாதவர்கள் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.