2013-12-13 15:33:53

கிறிஸ்மஸ் மரம் இறை ஒளியின் அடையாளம், திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.13,2013. கிறிஸ்மஸ் மரம், இறைவனின் சுடர்விடும் ஒளியின் அடையாளமாகவும், அவ்வொளியை நமக்கு நினைவுபடுத்துவதாகவும் இருக்கின்றது எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடிலுக்கு அருகில் வைக்கப்படுவதற்கென பெரிய கிறிஸ்மஸ் மரத்தையும், வத்திக்கானில் பல இடங்களில் வைப்பதற்கென பல அளவிலான கிறிஸ்துமஸ் மரங்களையும் நன்கொடையாக வழங்கிய ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் Waldmünchen நகரத் தந்தை, அதிகாரிகள், குடிமக்கள் என, ஏறக்குறைய 350 பேரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இவர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனின் சுடர்விடும் ஒளியின் மகிழ்வை மனித சமுதாயத்துக்கு வழங்குவதற்கென, இன்றும்கூட இயேசு, தவறுகள் மற்றும் பாவத்தின் இருளைத் தொடர்ந்து அகற்றி வருகிறார் எனவும் கூறினார்.
இந்த நன்கொடைகள், திருப்பீடத்துக்கும், ஜெர்மனிக்கும், சிறப்பாக, பவேரியாவுக்கும் இடையே நிலவும் ஆன்மீக மற்றும் நட்பின் பிணைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் பெரிய கிறிஸ்மஸ் மரம், ஜெர்மனி மற்றும் செக் குடியரசு நாடுகளின் எல்லையில் இருந்ததால், இம்மரம் அனைத்து நாட்டு மரமாகவும் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இக்கிறிஸ்மஸ் மரத்தை ஒளியூட்டும் நிகழ்ச்சி இவ்வெள்ளி மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.