டிச.13,2013. உலக அளவில் உள்ள 46 ஆயிரம் மூலிகைத் தாவரங்களில், இந்தியாவில் மட்டும் 7,500
மூலிகைத் தாவரங்கள் உள்ளன எனவும், ஒவ்வொரு மூலிகையும், அதிகப் பயன்களைத் தரக்கூடியது
எனவும், இன்னும் கண்டறியப்பட வேண்டிய மூலிகைத் தாவரங்கள் அதிகம் உள்ளன எனவும் விருதுநகரில்
நடந்த 2 நாள் தேசிய கருத்தரங்கில் கூறப்பட்டது. இக்கருத்தரங்கை துவங்கி வைத்துப் பேசிய
மத்திய அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்கீழ் இயங்கும், கேப்டன் சீனிவாசக
மூர்த்தி ஆராய்ச்சி மைய இயக்குனர் சரஸ்வதி, இந்தியாவில் மேற்கத்திய கலாச்சாரம் புகுந்ததால்,
பாரம்பரிய உணவு முறைகளை நாம் ஒதுக்கி விட்டோம் என்றும், மூலிகையின் பயன்பாட்டை மறந்து
வருகிறோம் என்றும் தெரிவித்தார். அதிக விளைச்சலுக்காக விவசாயிகள், வேதிய உரங்களை
இடுவதால், நிலம் மலட்டுத் தன்மை அடைகிறது. பயிர்களுக்கு இதுபோன்ற உரம் மற்றும் மருந்து
அடிப்பதால், அருகில் உள்ள மூலிகைத் தாவரங்களும் அழிந்து விடுகின்றன. தற்போது, மக்கள்
மத்தியில், மூலிகைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், ஆங்கில மருத்துவத்தை கைவிட்டு,
பலரும் மூலிகைச் சிகிச்சைக்கு மாறி வருவது வரவேற்கத்தக்கது என்றும் சரஸ்வதி கூறினார். இந்தியாவில்
மூலிகைகளைக் கண்டறிந்து வளர்க்கவும், அவற்றின் தன்மை மாறாமல் பாதுகாக்கவும், மத்திய அரசு
ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கி வருகிறது. மூலிகைத் தாவரம் வளர்க்கும் விவசாயிகளுக்கும்
மானியம் வழங்குகிறது என்றார் சரஸ்வதி. இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள்
தங்களது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.