2013-12-12 16:34:22

புது டில்லியில் பேராயர் Anil Couto அவர்களையும், பிற மதத் தலைவர்களையும், காவல் துறையினர் கைது


டிச.12,2013. தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகளைக் கோரி புது டில்லியில் இப்புதனன்று ஓர் ஊர்வலத்தை மேற்கொண்ட டில்லி பேராயர் Anil Couto அவர்களையும், பிற மதத் தலைவர்களையும், காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு உரிமைகள் தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் சமர்ப்பிக்க மதத் தலைவர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மேற்கொண்ட அமைதியான ஓர் ஊர்வலத்தின் மீது காவல்துறையினர் வன்முறை தாக்குதல் நடத்தி, மதத் தலைவர்களையும், ஏனைய அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள் ஆகியோரை கைது செய்தனர்.
அமைதியான ஓர் ஊர்வலத்தில் அத்துமீறிய வன்முறையைப் பயன்படுத்தியது வெட்கத்திற்குரியது என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசும் தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் தரப்பட வேண்டிய உரிமைகளை மறுப்பது பெரும் அநீதி என்றும், இதைக் குறித்து ஊடகங்களும் மௌனம் காப்பது தவறு என்றும் பேராயர் Anil Couto தெரிவித்தார்.
கைது செய்யப்பட பேராயர் Couto அவர்களையும், ஏனையத் தலைவர்களையும் காவல் துறையினர் பின்னர் விடுவித்தனர். இந்நிகழ்வைக் குறித்து காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய டில்லி உயர்மறைமாவட்டம் முயன்று வருவதாக UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / UCAN








All the contents on this site are copyrighted ©.