2013-12-12 16:33:43

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென தயார் செய்யும் இந்நாட்களில், இறைவனுக்குச் செவிமடுக்க அமைதியாக இருப்பது பயன்தரும் - திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.12,2013. கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென நம்மையே தயார் செய்யும் இந்நாட்களில், ஒரு தாயைப்போல, தந்தையைப்போல நம்மிடம் அன்புடன் உரையாடும் இறைவனுக்குச் செவிமடுக்க நாம் அமைதியாக இருப்பது பயன்தரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 12, இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, இறைவாக்கினர் எசாயா அவர்களின் வார்த்தைகளை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
கனவு கண்டு, பயந்து கண்விழித்து அழும் குழந்தையிடம் 'நான் இருக்கிறேன், அஞ்சாதே' என்று தேற்றும் தாயாக, தந்தையாக இறைவன் நம்மைத் தேடி வருகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இறைவன் நம்மிடம் என்ன பேசுகிறார் என்பதைவிட, அவர் நம்மிடம் எவ்விதம் பேசுகிறார் என்பதில் கவனம் செலுத்துவது பயனளிக்கும் என்பதை தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
குழந்தைகளிடம் பேசும் பெற்றோர், பயன்படுத்தும் வார்த்தைகளை, மேலோட்டமாக, வெளிப்புறத்திலிருந்து காண்போர், அர்த்தமற்ற பிதற்றல் என்று கூறலாம், ஆனால், அந்த வார்த்தைகள் குழந்தைகளுக்கு ஆறுதலும், உறுதியும் தருகின்றன என்று கூறிய திருத்தந்தை, இதே நிலையில் இறைவாக்கினர் எசாயாவிடம் இறைவன் பேசுவதைக் காணலாம் என்று விளக்கினார்.
இறைவன் இவ்விதம் பேசுவதை ஆழமாகப் புரிந்துகொள்ள நம் மனதை ஒரு நிலைப்படுத்தும் அமைதி பெரிதும் உதவும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.