2013-12-12 16:34:40

உலகில் பிறக்கும் குழந்தைகளில் 3ல் ஒரு குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை - UNICEF அதிர்ச்சித் தகவல்


டிச.12,2013. உலகில் இன்று வாழும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 23 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படாமல் உள்ளது என்று UNICEF அறிக்கை ஒன்று கூறுகிறது.
குழந்தைகளின் நலனுக்கென, ஐ.நா.வின் ஓர் அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள UNICEF நிறுவனம், டிசம்பர் 11, இப்புதனன்று தன் 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
இத்தருணத்தையொட்டி, UNICEF நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் உலகில் பிறக்கும் குழந்தைகளில் 3ல் ஒரு குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வழங்கியுள்ளது.
குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படுவது, அக்குழந்தையின் அடிப்படை உரிமை என்று கூறிய UNICEF நிறுவனத்தின் இணை இயக்குனர் Geeta Rao Gupta அவர்கள், இந்த உரிமை மறுக்கப்பட்ட குழந்தைகள், ஏனைய அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பல சாதனைகளை ஆற்றக்கூடியவர்கள் என்றாலும், அவர்கள் இவ்வுலகில் பிறந்ததற்கான ஆதாரமே இல்லாதபோது, அவர்களின் எதிர்காலம் முழுவதும் கேள்விக்குறியாகிறது என்று UNICEF இயக்குனர் Gupta அவர்கள், தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.