2013-12-12 16:33:53

இன்றைய உலகில் பெருகிவரும் மனித வர்த்தகத்தை தடுக்கவேண்டும் என்பதே என் முக்கிய வேண்டுகோள் - திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.12,2013. மத நம்பிக்கை உள்ளவர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் இணைந்து, இன்றைய உலகில் பெருகிவரும் மனித வர்த்தகத்தைத் தடுக்கவேண்டும் என்பதே என் முக்கிய வேண்டுகோள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கானில் தங்காமல், அதேநேரம் தங்கள் நாடுகளின் தூதர்களாக வத்திக்கானுடன் தொடர்பு கொண்டுள்ள 17 நாடுகளின் தூதர்களை, டிசம்பர் 12, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித மாண்பை குலைக்கும் மனித வர்த்தகத்தைத் தன் உரையின் மையக்கருத்தாக பகிர்ந்து கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் போதைப்பொருள்கள், போர்க்கருவிகள் ஆகியவற்றின் வர்த்த்கங்களுடன் தொடர்புடைய மனித வர்த்தகத்தைத் தடுக்க அரசுகள் தகுந்த முயற்சிகள் மேற்கொள்வதில்லை என்பதை திருத்தந்தை தன் உரையில் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மனித வர்த்தகத்தில் குழந்தைகளும், பெண்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவர்களின் அடிப்படை மனித மாண்பு பல வழிகளிலும் சிதைக்கப்பட்டு, அவர்கள் வர்த்தகப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத தீமை என்பதையும் எடுத்துரைத்தார்.
அல்ஜீரியா, டென்மார்க், பாகிஸ்தான், மால்டா, உட்பட 17 நாடுகளின் தூதர்களை திருத்தந்தை சந்தித்து, அவர்கள் தங்கள் நாடுகளின் சார்பில் கொணர்ந்த நம்பிக்கைச் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.