2013-12-12 16:34:11

2013ம் ஆண்டின் மனிதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது - கர்தினால் Timothy Dolan


டிச.12,2013. இறையன்பையும், மக்கள் மீது கனிவையும் வெளிப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2013ம் ஆண்டின் மனிதராக Time இதழ் தெரிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது என்று நியூயார்க் பேராயர் கர்தினால் Timothy Dolan அவர்கள் கூறினார்.
அன்பும் கனிவும் திருஅவையில் எக்காலமும் அழியாத செய்தி என்றும், அந்த நற்செய்தியின் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக வாழும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டின் மனிதர் என்ற இடத்தைப் பெறுவது அனைவரும் எதிர்பார்த்த ஒரு தெரிவே என்றும் கர்தினால் Dolan தெரிவித்தார்.
திருஅவையின் மீது மக்களுக்கு மீண்டும் ஓர் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் உருவாக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையை விட்டு விலகி இருந்த பலரை மீண்டும் அதில் இணைத்ததை காணமுடிகிறது என்று Time இதழின் பொறுப்பாசிரியரான Nancy Gibbs அவர்கள் CNA செய்தியிடம் கூறினார்.
பாரம்பரியத்தைக் காப்பவர்களும், புதுமையை விரும்புகிறவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகளை பேசும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மனசாட்சியின் குரலாக இருந்து செயல்படுகிறார் என்று பொறுப்பாசிரியர் Nancy Gibbs எடுத்துரைத்தார்.
பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுக் கிடந்த கத்தோலிக்கத் திருஅவையை ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாக வாழ்வது பெருமைக்குரியது என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைத்துள்ளார் என்று அமெரிக்க இயேசு சபை மாநிலங்களின் தலைவர் அருள்பணி Thomas Smolich அவர்கள் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Time இதழின் 'ஆண்டின் மனிதர்' என்ற நிலையைப் பெறும் மூன்றாவது திருத்தந்தை என்பதும், இவருக்கு முன்னர், 1962ம் ஆண்டு திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், 1994ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களும் இதே நிலையைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், Time இதழின் இப்பெருமைக்குரியவர்களாக கருதப்பட்ட முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களும், இரண்டாம் ஜான்பால் அவர்களும் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனித நிலைக்கு உயர்த்தப்பட உள்ளனர் என்பதும் மற்றொரு சிறப்பு.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.