2013-12-11 15:37:33

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட Twitter செய்திகளுக்கு வயது ஓராண்டு


டிச.11,2013. ஒவ்வொரு நாளும் திருத்தந்தை 9 மொழிகளில் வழங்கும் Twitter செய்திகள் 11,000,000 மக்களால் பின்பற்றப்படுகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால், 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி துவக்கப்பட்ட Twitter செய்திகள் ஓராண்டு நிறைவை நோக்கிச் செல்லும் வேளையில், திருப்பீடத்தின் சமுதாயத் தொடர்பு அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு நாளும் 140 எழுத்துக்களைக் கொண்டு திருத்தந்தை வெளியிடும் குறுஞ்செய்திகள் சுவையான தூய நீர்த்துளி போல பல கோடி மக்களின் தாகத்தைத் தணிக்கின்றது என்று பேராயர் Celli மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் செய்திகளை 11,000,000 மக்கள் பின்பற்றினாலும், அச்செய்திகள் மீண்டும் மீண்டும் பலரால் பரிமாறப்பட்டு, அச்செய்திகளை வாசிப்போரின் எண்ணிக்கை 60,000,000 விட அதிகம் என்பது உறுதி என்றும் பேராயர் Celli எடுத்துரைத்தார்.
@pontifex என்ற பெயரில் வெளியாகும் Twitter செய்திகள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்கும் கலாச்சாரத்தை இவ்வுலகில் வளர்த்து வருவதை நாம் காண முடிகிறது என்று பேராயர் Celli தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.