2013-12-11 15:15:34

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்:இறுதி தீர்ப்புக்கு அஞ்ச வேண்டாம்


அன்பு நெஞ்சங்களே, கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கிவர வர வத்திக்கானுக்கு வருகைதரும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன்கிழமை காலையில் கூடியிருந்த முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு, நாம் விசுவாச அறிக்கையில் சொல்லும் “முடிவில்லாத வாழ்வில்... நம்பிக்கை வைக்கிறேன்” என்பது பற்றி முதலில் இத்தாலிய மொழியில் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட அவ்வுரையின் சுருக்கத்தைத் தமிழில் தருகிறோம்.
அன்புச் சகோதர சகோதரிகளே, நமது விசுவாச அறிக்கையில் இறுதியாகச் சொல்லும் “முடிவில்லாத வாழ்வில்... நம்பிக்கை வைக்கிறேன்” என்பது பற்றி இன்றைய நமது மறைக்கல்வியில் பார்ப்போம். வாழ்வோர் மற்றும் இறந்தோரின் நீதிபதியாக கிறிஸ்து மகிமையில் வரும்போது, நாம் இவ்வுலக வாழ்வில் செய்த நன்மைகள் அல்லது செய்யத் தவறியவை குறித்து கடவுள் முன்பாக கணக்கு கொடுக்க வேண்டும். இந்த இறுதித் தீர்ப்பை நாம் ஒருவித நடுக்கத்தோடு எதிர்பார்க்கிறோம், ஆயினும், இதனை ஓர் ஆறுதலின் ஊற்றாகவும், மகிழ்வுநிறை நம்பிக்கையாகவும் பார்ப்பதற்கு, திருஅவை நம்மை அழைக்கிறது. தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் மாரனத்தா என்ற சொல்லைப் பயன்படுத்தி, இந்த நம்பிக்கையைக் கொண்டாடினர். கிறிஸ்துவின் மறுவருகைக்காக மன்றாடுவதோடு, மனித சமுதாயம் கடவுளோடு ஒப்புரவாகும் மாபெரும் திருமண விழாவின் தொடக்கத்தையும் இந்நம்பிக்கையில் சிறப்பித்தனர். நமது நடுத்தீர்ப்பின்போது, நாம் தனியாக இருக்கமாட்டோம். நமக்காகப் பரிந்துபேசும் இயேசு வானகத்தந்தையோடும், அனைத்துப் புனிதர்களோடும் நம் பக்கம் இருப்பார். அவர் நமக்குச் சொல்வதுபோல, இறைமகன் மீட்பளிப்பதற்காக இப்பூவுலகுக்கு அனுப்பப்பட்டார். அவரில் நம்பிக்கை வைப்பவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள். நம் அன்றாட வாழ்வில் கிறிஸ்துவின் போதனைகளுக்கு நாம் எவ்விதம் பதிலளிக்கிறோம், நம் சகோதர சகோதரிகளுக்குப் பணிபுரிவதில் நாம் அவரை எவ்விதம் பின்பற்றுகிறோம் என்பதைபொறுத்து கடவுளின் இறுதித் தீர்ப்பு இருக்கும். ஆதலால் அவரின் வாக்குறுதிகளில் மகிழ்ச்சிநிறை நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டு நமது நீதிபதியைச் சந்திப்பதற்கு நம்மைத் தயாரிப்போம். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆங்கில மறைபோதகம் இருந்தது.
இன்னும், இஸ்பானியத்தில் உரையாற்றியபோது, அமெரிக்காவின் பாதுகாவலராகிய குவாதாலூப்பே அன்னைமரி விழா இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டு அனைத்து அமெரிக்கர்களும் அன்பும் கனிவும் நிறைந்தவர்களாக வாழுமாறு கேட்டுக்கொண்டார். பல்வேறு இனத்தவர் வாழும் அமெரிக்காவில் மனித வாழ்வு, தாயின் கருவறை முதல் அதன் இறுதிவரை காப்பாற்றப்படுமாறும், அக்கண்டத்தினர் குடியேற்றதாரரை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஒரே மனித குடும்பம், எல்லாருக்கும் உணவு என்ற மையக்கருத்துடன் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் தொடங்கியுள்ள பசிக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இம்முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் அநீதியான இப்பசிக்கொடுமையைப் போக்குவதற்கு, தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், அரசுகள், நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உழைக்குமாறும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
இறுதியில் அங்கிருந்த அனைவருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மகிழ்வும் அமைதியும் நிறைந்த இறையாசீரை வேண்டி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.