2013-12-11 15:37:24

சிரியா நாட்டிற்குத் தேவையான அமைதி உறுதி செய்யப்படும் - கர்தினால் Robert Sarah


டிச.11,2013. சிரியா நாட்டை மையப்படுத்தி, வருகிற சனவரி மாதம் 22ம் தேதி ஜெனீவாவில் நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அந்நாட்டிற்குத் தேவையான அமைதி உறுதி செய்யப்படும் என்று தான் நம்புவதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிறரன்புப் பணிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள Cor Unum என்றழைக்கப்படும் திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Robert Sarah அவர்கள், அண்மையில் லெபனான் நாட்டில் மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தையடுத்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உருவாகவிருக்கும் நாளைய சிரியாவில், கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரும் முழுமையான உரிமைகள் பெற்று அமைதியில் வாழும் சூழல் உருவாகும் என்று தான் நம்புவதாகவும் கர்தினால் Sarah அவர்கள் எடுத்துரைத்தார்.
“எங்கு மக்கள் துன்புறுகிறார்களோ அங்கெல்லாம் கிறிஸ்துவும் வாழ்கிறார்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 6ம் தேதி கூறியதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Sarah அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை, துன்புறும் மக்களுடன் தன்னையே இணைத்துக் கொள்கிறது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் கடந்த 20 மாதங்கள் கூடிவர முடியாத நிலையில் இருந்த ஆயர்கள், தன் அண்மைய பயணத்தின்போது கூடிவந்து பிரச்சனைகளை ஆய்வு செய்தது நம்பிக்கை தரும் அடையாளமாக இருந்தது என்று கர்தினால் Sarah சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.