2013-12-11 15:36:48

குடும்ப உணர்வு நம்மிடையே குறைவதே உலகில் நிலவும் பசிக்கு முதல் காரணம் - கர்தினால் பீட்டர் டர்க்சன்


டிச.11,2013. பசியையும், பட்டினியையும் ஒழிப்பதே நமது குறிக்கோள், பசித்திருப்போரை ஒழிப்பது அல்ல என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 10, இச்செவ்வாயன்று உரோம் நகரில் அனைத்துலக காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அளித்த ஒரு செய்தியில் இவ்வாறு கூறினார்.
"ஒரே மனித குடும்பம், அனைவருக்கும் உணவு" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கின் மையப்பொருள், "ஒரே குடும்பமாக நாம் வாழும்போது, அனைவருக்கும் உணவு கிடைக்கும்" என்பதை நினைவுறுத்துகிறது என்று தன் செய்தியில் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், குடும்ப உணர்வு நம்மிடையே குறைவதே உலகில் நிலவும் பசிக்கு முதல் காரணம் என்றும் குறிப்பிட்டார்.
உலகில் நிலவும் பசியைக் குறித்து நாம் அனைவரும் பல வழிகளில் அறிந்துள்ளோம் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட, உலகின் பல அமைப்புக்கள் பசியை உலகிலிருந்து போக்குவதையே மில்லென்னிய இலக்குகளில் முதன்மையாக ஏற்றுக் கொண்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
புத்தாண்டு நாளன்று திருத்தந்தை வெளியிடவிருக்கும் உலக அமைதி செய்தியில் பசியைப் போக்கும் முயற்சிகள் குறித்து சிறப்பான செய்தி வெளியிடுவார் என்பதையும் கர்தினால் டர்க்சன் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.