2013-12-11 14:56:24

அன்னைமரியாத் திருத்தலங்கள் - Kazan அன்னைமரியா திருத்தலம், இரஷ்யா


டிச.11,2013. இரஷ்யாவின் Tatarstan குடியரசின் தலைநகராகவும், பெரிய நகரமாகவும் அமைந்திருப்பது Kazan. ஐரோப்பிய இரஷ்யாவில் வோல்கா மற்றும் காசன்கா ஆறுகள் சேரும் இடத்தில் இந்நகர் அமைந்துள்ளது. உலகப் பாரம்பரிய வளங்கள் கொண்ட நகரமாக, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள Kazan, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முக்கியமான இடமாகும். இங்கு இவ்விரு மதத்தவருமே அமைதியில் வாழ்ந்து வருகின்றனர். Kazan, இரஷ்யாவின் பெரிய மற்றும் வளமையான நகரங்களில் ஒன்றாகும். இந்நகரில் போற்றப்பட்டுவரும் Kazan அன்னைமரியா திருவுருவ ஓவியம், Kazan Theotokos அதாவது Kazan அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார். இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையிலுள்ள மிகவும் உயரமான திருவுருவ ஓவியமாகவும் இது உள்ளது. இவ்வன்னைமரியா, Kazan நகரப் பாதுகாவலராகவும், அந்நகரைக் காப்பவராகவும் போற்றப்பட்டு வருகிறார். இத்திருவுருவத்தின் பிரதிகள் கத்தோலிக்க ஆலயங்களிலும் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இத்திருவுருவ ஓவியம் 1904ம் ஆண்டில் திருடப்பட்டு அழிக்கப்பட்டதாக உணரப்பட்டவரை, இவ்வன்னை இரஷ்யாவின் பாதுகாப்பாளர்(palladium) என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்தார். மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலும் Kazan அன்னைமரியாவுக்கென இரு பெரும் பேராலயங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இரஷ்யாவில் இன்னும் எண்ணற்ற Kazan அன்னைமரியா ஆலயங்கள் உள்ளன. இவ்வன்னையின் விழா ஜூலை 21ம் தேதியும், நவம்பர் 4ம் தேதியும் சிறப்பிக்கப்படுகின்றது. நவம்பர் 4, தேசிய ஒன்றிப்பு நாளாகும்.
Matrona என்ற சிறுமி, Kazan நகரின் பாதாளப் பகுதியில், 1579ம் ஆண்டு ஜூலை 8ம் தேதியன்று இந்த Kazan அன்னைமரியா திருவுருவ ஓவியத்தைக் கண்டெடுத்தார். அவ்விடத்தில் அவ்வோவியம் இருப்பதாக Theotokos அதாவது புனித கன்னிமரியே அச்சிறுமிக்கு காட்சியில் வெளிப்படுத்தியதாகப் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இத்திரு ஓவியம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் நினைவாக கட்டப்பட்ட Kazan Theotokos துறவு இல்லத்தில், இத்திரு ஓவியத்தின் மூலப்பிரதி வைக்கப்பட்டுள்ளது. இத்திரு ஓவியம் இந்தத் துறவு இல்லத்தில் 1904ம் ஆண்டுவரை வைக்கப்பட்டிருந்தது. இவ்வன்னையின் பெயரால் பிற ஆலயங்கள் எழுப்பப்பட்ட பின்னர் இதன் பிரதிகள் அவ்வாலயங்களில் வைக்கப்பட்டன. இரஷ்ய இராணுவத் தளபதிகள் Dmitry Pozharsky, Mikhail Kutuzov ஆகிய இருவரும் Kazan அன்னைமரியாவிடம் செபித்ததன்பேரில், 1612ம் ஆண்டில் போலந்தின் ஆக்ரமிப்பிலிருந்தும், 1709ம் ஆண்டில் சுவீடனின் ஆக்ரமிப்பிலிருந்தும், 1812ம் ஆண்டில் நெப்போலியனின் ஆக்ரமிப்பிலிருந்தும் இரஷ்யா காப்பாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வைக்கப்பட்டிருந்த Kazan Theotokos துறவு இல்லத்திலிருந்து 1904ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி இரவில் இந்த திருஓவியம் திருடப்பட்டது. இவ்வோவியம் வைக்கப்பட்டிருந்த சட்டம் தங்கத்தால் பல விலைமதிப்பற்ற ஆபரணங்களால் அழகு செய்யப்பட்டிருந்தது. திருடர்கள் இவற்றுக்காகவே இதனைத் திருடிச் சென்றுள்ளனர்.
பல ஆண்டுகள் கழித்து இரஷ்ய காவல்துறை திருடர்களைக் கண்டுபிடித்தது. இவ்வோவியம் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆயினும் ஒரு திருடர், இது சைபீரியாவில் காட்டுப்பகுதியிலுள்ள ஒரு துறவு இல்லத்தில் இது இருப்பதாகத் தெரிவித்தான். ஆனால் இதில் உண்மையில்லை என நம்பப்பட்டதால் இரஷ்ய காவல்துறையும் இதனைக் கண்டுபிடிக்க மறுத்துவிட்டது. போலியான திருவுருவத்தை வணங்குவது துரதிஷ்டம் என்று சொல்லி காவல்துறை இதனைத் தேடுவதற்கு முயற்சிக்கவில்லை. அச்சமயத்தில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையும், இந்த அன்னைமரியா திருஓவியம் காணாமற்போனது இரஷ்யாவுக்கு வரப்போகும் ஆபத்துக்களின் அடையாளம் என எச்சரித்தது. உண்மையில், 1905ம் ஆண்டில் இடம்பெற்ற புரட்சிகளின் தீமைகளுக்கும், இரஷ்ய-ஜப்பான் போரில் இரஷ்யா தோற்கடிக்கப்பட்டதற்கும் இதுவே காரணம் எனச் சிலர் நம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று அச்சிறுமி கண்டெடுத்த இந்த அன்னைமரியா திருஓவியம் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருப்பதாக, 1917ம் ஆண்டின் இரஷ்ய புரட்சிக்குப் பின்னர் கூறப்பட்டது. லெனின்கிராட் நகரம் முற்றுகையிடப்பட்டபோது அந்நகரின் கோட்டைகளைச் சுற்றி இந்த Kazan அன்னைமரி திருஓவியத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அன்னையின் அருள் வேண்டினர். பின்னாள்களில் இத்திருவுருவ ஓவியம், Bolsheviks என்பவர்களால் விற்கப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. எனினும், போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் 1970களில் வைக்கப்பட்ட இவ்வோவியம், அதன் மூலத்தின் பிரதி என்றே சொல்லப்படுகிறது. பாத்திமாவில் உள்ள இவ்வோவியம் 1730ம் ஆண்டைச் சேர்ந்தது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பாத்திமாவில் உள்ள Kazan அன்னைமரி திருஓவியம் 1993ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர் இதனை தனது அறையில் 11 ஆண்டுகள் வைத்து வணங்கி வந்தார். மாஸ்கோ அல்லது காசனுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு இதனை இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையிடம் ஒப்படைக்க விரும்பினார் திருத்தந்தை 2ம் ஜான் பால். ஆனால் அப்பயணத்துக்கு இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை தடையாக இருந்தார். எனவே 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயப் பீடத்தில் Kazan அன்னைமரி திருஓவியம் வைக்கப்பட்ட பின்னர் மாஸ்கோவுக்கு நிரந்தரமாக அளிக்கப்பட்டுவிட்டது. 2005ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி, இவ்வன்னையின் விழாவன்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தை 2ம் அலெக்சிஸ், Tatarstan குடியரசுத் தலைவர் Mintimer Shaymiev ஆகிய இருவரால் Kazan Kremlin மங்களவார்த்தை பேராலயத்தில் Kazan அன்னைமரி திருஓவியம் ஆடம்பரமாக வைக்கப்பட்டது.
Kazan அன்னைமரி கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்கு உதவுவாராக. கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக Kazan அன்னைமரியிடம் செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.