2013-12-10 14:45:31

திருத்தந்தை பிரான்சிஸ்: நம் ஆண்டவரின் கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது


டிச.10,2013. இயேசு நம்மை அணுகும்போது அவர் எப்போதும் கதவுகளைத் திறக்கிறார் மற்றும் நமக்கு அவர் நம்பிக்கையை அளிக்கிறார் என்று இச்செவ்வாய்க்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் ஆண்டவரின் ஆறுதலுக்கு நாம் ஒருபோதும் அஞ்சக்கூடாது, மாறாக, கடவுளின் கனிவை நாம் உணரச்செய்யும் அந்த ஆறுதலை நாம் கேட்க வேண்டும் மற்றும் அந்த ஆறுதலைத் தேட வேண்டும் என்றும் இம்மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
ஆறுதல் கூறுங்கள், என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள் என்ற எசாயா இறைவாக்கினரின் புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதலளிக்க, அமைதி வழங்க, நம்பிக்கையை ஏற்படுத்த அவர்களை அணுகுகிறார் என்றும் கூறினார்.
ஆயனைப்போல ஆண்டவர் நம் மந்தைக்கு உணவளிக்கிறார், ஆடுகளைத் தம் தோள்களில் தூக்கிச் சுமக்கிறார் என்றும், அவர் நம்மை அணுகும்போது கதவுகளை எப்போதும் திறக்கிறார், நமக்கு நம்பிக்கையை அளிக்கிறார், இந்த நம்பிக்கை, கிறிஸ்தவ வாழ்வுக்கு உண்மையான சக்தியைக் கொடுக்கின்றது, இது திருவருள், இது ஒரு கொடை என்றும் இச்செவ்வாய்த் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.