2013-12-10 14:57:24

அனைத்துலக மனித உரிமைகள் தினத்தன்று மண்டேலாவுக்கு ஐ.நா.பொதுச் செயலர் மரியாதை


டிச.10,2013. மனித உரிமைகளுக்காகப் போராடியவர்களில் இந்த நம் காலத்தின் பெரும் அடையாளங்களில் ஒருவராகத் திகழும் நெல்சன் மண்டேலாவுக்கு, அனைத்துலக மனித உரிமைகள் தினத்தன்று தான் மரியாதை செலுத்து விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
டிசம்பர் 10, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் தினத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், நெல்சன் மண்டேலாவின் இறப்பு இவ்வுலகை துயரத்தில் ஆழ்த்தியிருந்தாலும், மனித மாண்பு, சமத்துவம், நீதி, பரிவு ஆகியவற்றுக்காக அவர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்திருந்தது, அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைக்கும் ஓர் உலகை அமைப்பதற்கு நமக்குத் தொடர்ந்து தூண்டுகோலாய் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த அனைத்துலக மனித உரிமைகள் அறிவிப்பை ஐ.நா.பொது அவை ஏற்றுக்கொண்டதன் 20ம் ஆண்டை இவ்வாண்டு மனித உரிமைகள் தினம் சிறப்பிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், மனித உரிமைகளைக் காப்பதில் நாடுகளுக்கு இருக்கும் கடமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் ஜொஹானஸ்பெர்கில், மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கென இச்செவ்வாயன்று நடைபெற்ற தேசிய நினைவு நிகழ்வில், கர்தினால் பீட்டர் டர்க்சன், ஐ.நா.பொதுச் செயலர் உட்பட ஏறக்குறைய 90 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.