2013-12-07 15:33:58

திருத்தந்தை பிரான்சிஸ் அகதிகளுக்கு அளித்துவரும் ஆதரவுக்கு ஐ.நா.அதிகாரி நன்றி


டிச.07,2013. நல்லதொரு வாழ்வைத்தேடி தங்களது தாயகத்தைவிட்டு வெளியேறும் மக்களின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்துலக சமுதாயத்துக்கு விடுத்துவரும் அழைப்புக்கு நன்றி தெரிவித்தார் ஐ.நா.அகதிகள் அவையின் உயர் இயக்குனர் António Guterres.
திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் ஐ.நா. அதிகாரி Guterresக்கும் இடையே திருப்பீடத்தில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற சந்திப்பில், மத்திய தரைக்கடல் பகுதியின் நெருக்கடிகள், குறிப்பாக, தொடர்ந்து வன்முறை இடம்பெறும் சிரியாவின் நிலை குறித்து பேசப்பட்டது.
இச்சந்திப்பில், சிரியா அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கும் கட்டுப்பாடுகள் குறித்த கவலையையும் திருத்தந்தையிடம் வெளியிட்டார் Guterres.
சிரியாவிலிருந்து ஏறக்குறைய 20 இலட்சம் பேர், அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய மனிதாபிமான நிறுவனங்களில் ஒன்றான UNHCR என்ற ஐ.நா.அகதிகள் அவையில் 126 நாடுகளில் 7,000த்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிசெய்கின்றனர். இதன் 85 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பணியாளர்கள் கடினமான மற்றும் ஆபத்தான சூழல்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.