2013-12-07 15:26:21

இன்றைய நுகர்வுக் கலாச்சார உலகில் மனித மாண்பு மதிக்கப்பட திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு


டிச.07,2013. இக்காலத்திய நுகர்வுக் கலாச்சாரத்தில் மிகவும் வலுவற்றவர்களும், ஏழைகளும் உண்மையாகவே பலிகடா ஆகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமய சுதந்திரம், வாழ்வின் அனைத்து நிலைகளும் காக்கப்படுவது, வேலைசெய்ய உரிமை, தரமான வேலை, குடும்பம், கல்வி போன்றவற்றுக்காக, நவீன மற்றும் இக்காலத்திய வரலாற்றில் இறைமக்கள் ஆற்றியுள்ள சேவைகள் குறிப்பிடத்தக்க பலனைக் கொடுத்துள்ளன எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால் ரெனாத்தோ மர்த்தீனோ தலைமையிலான மனித மாண்பு நிறுவனத்தின் 200 உறுப்பினர்களை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இச்சனிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், நுகர்வுக் கலாச்சாரம் மனித மாண்பை மீறுவதற்கு இட்டுச் செல்கின்றது எனவும் தெரிவித்தார்.
பல நம்பிக்கைகளும் சாதனைகளும் நிறைந்த இன்றைய நம் உலகத்தில் வீணடிப்புக் கலாச்சாரத்தை உற்பத்திசெய்யும் சக்திகள் உள்ளன, இக்கலாச்சாரம் பொதுவான மனநிலையாக மாறி வருவது வருந்தத்தக்கது எனத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், கருவில் வளரும் குழந்தைகள், முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் போன்ற சமூகத்தில் பலவீனமானவர்கள் இக்கலாச்சாரத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.