2013-12-06 16:18:37

பிலிப்பீன்ஸின் 800 கோடி டாலர் வெளிநாட்டுக் கடன் இரத்து செய்யப்படுமாறு வேண்டுகோள்


டிச.06,2013. ஹையான் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் நாட்டின் 800 கோடி டாலர் வெளிநாட்டுக் கடன் இரத்து செய்யப்படுமாறு கிறிஸ்தவ மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பிலிப்பீன்ஸ் நாடு, ஒரு நாளில் 2 கோடி டாலருக்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கடனைச் செலுத்தவேண்டியநிலையில், அந்நாட்டை ஹையான் புயல் தாக்கிய கடந்த நவம்பர் 8ம் தேதியிலிருந்து அந்நாடு 55 கோடிக்கு மேற்பட்ட டாலரை வெளிநாட்டுக் கடனுக்கெனச் செலவழித்துள்ளது.
பிலிப்பீன்ஸ் கடந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் 11 ஆயிரத்து 500 கோடி டாலரைக் கடனாகப் பெற்றுள்ளது, அதேசமயம், 13 ஆயிரத்து 200 கோடி டாலரைத் திரும்பச் செலுத்தியுள்ளது, ஆயினும் வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியைச் செலுத்தவேண்டியிருப்பதால், அந்நாடு இன்னும், 6000 கோடி டாலர் வெளிநாட்டுக் கடனைக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனங்கள் கூறுகின்றன.
பிரிட்டனின் ஜூபிலி கடன் மன்னிப்பு நிறுவனம், கிறிஸ்டியன் எய்டு அமைப்பு ஆகிய இரண்டும், பிலிப்பீன்ஸின் கடன் மன்னிப்பு கூட்டமைப்பு மற்றும் இதே விடயம் தொடர்பான ஆசிய பசிபிக் இயக்கத்தோடு சேர்ந்து பிலிப்பீன்ஸின் 800 கோடி டாலர் வெளிநாட்டுக் கடன் இரத்து செய்யப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.