2013-12-06 16:18:15

திருத்தந்தை பிரான்சிஸ் : நமது செபம் கடவுளைக் கொஞ்சம் தொந்தரவு செய்வதுபோல் உள்ளது


டிச.06,2013. நாம் செபத்தில் கேட்பது எப்பொழுது எப்படிக் கிடைக்கும் என்பது தெரியாதிருக்கும்போதும், கடவுளின் கண்களை, அவரின் இதயத்தை நம் பக்கம் திருப்புவதற்காக நாம் செய்யும் செபம் கடவுளைக் கொஞ்சம் தொந்தரவு செய்வதுபோல் உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், பார்வையிழந்த இரு மனிதர்கள் பார்வை பெற்றதை விளக்கும் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, செபத்தைப் பற்றிய சிந்தனைகளை வழங்கினார்.
செபத்துக்கு இரு மனநிலைகள் உள்ளன, ஒன்று நாம் தேவையில் இருக்கிறோம், மற்றது, கடவுள் தமது வழியில், தமக்குரிய நேரத்தில் நமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற உறுதியில் செபிப்பது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செபிக்கும் மனிதர் கடவுளைத் தொந்தரவு செய்வதற்கு அஞ்சக் கூடாது என்றும், கடவுளின் அன்பில் குருட்டுத்தனமான நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, நள்ளிரவில் சென்று நண்பனிடம் உணவு கேட்டுத் தொந்தரவு செய்தவர் பற்றிச் சொல்லி எப்படிச் செபிப்பது என்பதை இயேசுவே கற்றுக்கொடுத்திருக்கிறார் என்றும் கூறினார்.
கடவுள் நமது செபத்தைக் கேட்கவேண்டும் என்பதற்காக அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்ய வேண்டும் எனவும், கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என இயேசுவே சொல்லியிருக்கிறார் எனவும் தனது மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.