2013-12-06 16:17:50

திருத்தந்தை பிரான்சிஸ் : தென்னாப்ரிக்காவின் அனைத்து மக்களின் மனித மாண்பை உயர்த்துவதற்கு அயராது அர்ப்பணித்தவர் மண்டேலா


டிச.06,2013. தென்னாப்ரிக்க அரசியல் நடவடிக்கைகளில் நீதி மற்றும் பொதுநலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதற்கு, மறைந்த அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவின் எடுத்துக்காட்டான வாழ்வு அந்நாட்டின் தலைமுறைகளுக்குத் தூண்டுகோலாய் இருக்கட்டும் எனக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென்னாப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து, மண்டேலாவின் குடும்பத்தினர், அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக் குடிமக்களுக்குமென இரங்கல் தந்திச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தென்னாப்ரிக்காவின் அனைத்து மக்களும், இறைவனின் கொடைகளாகிய அமைதியையும் வளமையையும் பெறுமாறு செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் தற்போதைய அரசுத்தலைவர் Jacob Zumaவுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தென்னாப்ரிக்காவின் அனைத்து மக்களின் மனித உரிமைகளையும், அஹிம்சை, ஒப்புரவு, உண்மை ஆகியவற்றின் மீது புதிய தென்னாப்ரிக்கா உறுதியான அடித்தளத்தை அமைப்பதையும் ஊக்குவிப்பதில் தன்னை முழுவதும் அர்ப்பணித்திருந்த நெல்சன் மண்டேலாவுக்குத் தனது மரியாதையைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும், இவரின் பிரிவால் வருந்தும் அனைவருக்கும் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென்னாப்ரிக்க முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா, தனது 95வது வயதில் ஜொஹானஸ்பெர்க்கிலுள்ள அவரது இல்லத்தில் இவ்வியாழன் இரவு அமைதியாக இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.