2013-12-06 16:18:06

ஜூலை 18, அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம்


டிச.06,2013. மறைந்த நெல்சன் மண்டேலா, மனித உரிமைகள் வழக்கறிஞர், மனச்சான்றின் கைதி, அனைத்துலக அமைதிக்காக உழைத்தவர், தென்னாப்ரிக்க நிறவெறிப்பாகுபாடு முடிவடைந்த பின்னர் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினத்தவர் என்றெல்லாம் தனது புகழஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
1993ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்ற நெல்சன் மண்டேலாவுக்கு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான அனைத்துலக மகாத்மா காந்தி விருதும் வழங்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டில் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
உலக அமைதிக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. தனது கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.
மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் செலவழித்தார்.
தென்னாப்ரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதி ஐ.நா.வின் அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : செய்தி நிறுவனங்கள்







All the contents on this site are copyrighted ©.