2013-12-05 16:20:22

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் சிறப்பு அமைப்பு


டிச.05,2013. குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பாதிக்கப்பட்டோருக்கான மேய்ப்புப்பணி அக்கறை ஆகியவை குறித்து திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் சிறப்பு அமைப்பு ஒன்றை உருவாக்க திருத்தந்தை பிரான்சிஸ் தீர்மானித்துள்ளதாக இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டது.
கர்தினால்களின் ஆலோசனை அவையின் அங்கத்தினராகிய பாஸ்டன் கர்தினால் Sean Patrick O’Malley முன்னிலையில் திருப்பீடத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திருஅவைக்குள் இடம்பெற்ற குழந்தைகளின் உரிமை மீறல்கள், அதனால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி ஆகியவை குறித்த மூன்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தையால் நியமிக்கப்படவுள்ள இந்தச் சிறப்பு அவை, குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் குறித்து முதலில் ஆய்வு செய்வதுடன், பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவைகள், துறவுசபைகள் ஆகியவைகளுடன் இணைந்து திருப்பீடம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைசெய்து, இப்புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு இயைந்த நபர்களின் பெயர்களைப் பரிந்துரைச்செய்யும். இந்நபர்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உளரீதியாக உதவிகளைச் செய்யும் பொதுநிலையினர், துறவறத்தார் மற்றும் குருக்களாக அவர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.