2013-12-04 16:54:51

திருப்பீட பொதுநிலையினர் அவையின் 26வது நிறையமர்வுக் கூட்டம்


டிச.04,2013. டிஜிட்டல் உலகில் கிறிஸ்துவை அறிவித்தல் என்ற தலைப்பில், இவ்வியாழன் முதல் சனிக்கிழமை வரை திருப்பீட பொதுநிலையினர் அவை உரோம் நகரில் 26வது நிறையமர்வு ஆண்டுக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
இக்கூட்டம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப பேட்டியளித்த இத்திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் Stanisław Ryłko, நற்செய்தியைப் புதிய வழியில் அறிவிப்பதில் எதிர்கொள்ளப்படும் பெரும் சவால்கள், தாராளமயமாக்கப்பட்ட இவ்வுலகின் புதிய சமூக-கலாச்சாரச் சூழல்களில் நோக்கப்பட வேண்டுமெனக் கூறினார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் உண்மையான ஊக்குனர்களாய்ப் பொதுநிலையினர் இருக்கும்வேளை, இந்த நவீன உலகில் கிறிஸ்தவர்கள் தங்களது தனித்துவத்தை இழந்துவிடாமல், உலகின் ஒளியாகவும், உலகின் உப்பாகவும் எவ்வாறு வாழ வேண்டுமென்பதை இக்கூட்டம் வலியுறுத்தும் என்று கூறினார் கர்தினால் Ryłko.
நற்செய்தி அறிவிப்பதற்கு, முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் உதவியாக உள்ளதையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Ryłko, நற்செய்தியை அறிவிப்பதற்கு ஆள்-ஆள் சந்திப்பு மிகவும் முக்கியம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.