2013-12-04 15:52:00

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


டிச.,04,2013. குளிர்காலத்திலும் சூரியன் தன் கதிர்களை வீசி இதமான வெப்பத்தைத் தந்துகொண்டிருக்க, திருத்தந்தையின் இவ்வார புதன் பொதுமறைபோதகமும் வழக்கம்போல், தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. 'இறந்தோரின் உயிர்ப்பு' குறித்த சிந்தனைகளுக்குச் செல்வோம் என தன் புதன்பொதுமறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறந்தோரின் உயிர்ப்பு குறித்து சிந்திக்கும்போது நாம், இயேசுவின் உயிர்ப்புக்கும் நம் உயிர்ப்புக்கும் இடையேயிருக்கும் மூன்று கூறுகளை நோக்குகிறோம்.
முதல் கூறாக, 'நானே உயிர்ப்பும் வாழ்வும்' என்றுரைத்த கிறிஸ்துவில் நம் உயிர்ப்பு குறித்த விசுவாசம் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை நற்செய்தி வெளிப்படுத்துகிறது. பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப்போல் வாழ்ந்த இயேசு, தந்தையை நோக்கிய தன் பயணத்தில் நம்மையும் தன்னோடு அழைத்துச்செல்லும் நோக்கில் நம்மையெல்லாம் ஒன்று திரட்டுகிறார். நிலைப்பேறுடைமையில் தன் முழுமையைக் கொண்டுள்ள இறைவனுடனான ஒன்றிப்பின் வாக்குறுதியாக, தூய ஆவியை தன் சீடர்களுக்கு வழங்குகிறார் உயிர்த்த இயேசு. முடிவற்ற வாழ்வின் முன்நிகழ்வே நம் நம்பிக்கையின் காரணமாகவும் ஆதாரமாகவும் உள்ளது. இது பண்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டால், தனிமனிதர்களாகவும் சமுதாயங்களாகவும் நம் வாழ்வை இது ஒளிர்விக்கும்.
இரண்டாவதாக, இயேசு தன் மகிமைப்படுத்தப்பட்ட உடலோடு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவின் வழியாக நம் உடலும் உயிர்ப்பின்போது மகிமைப்படுத்தப்பட்டு, நம் ஆன்மாக்களோடு மீண்டும் இணையும். ஆகவே, திருவருட்சாதனங்களில், குறிப்பாக திருநற்கருணையில், கிறிஸ்துவைச் சந்திக்கும் நம் அனுபவம், வானுலகில் நம் உடலும் ஆன்மாவும் ஒன்றிணைவதற்கு நம்மைத் தயாரிக்கிறது.
மூன்றாவதாக, இயேசு நம்மை உலகமுடிவில் உயிர்த்தெழச்செய்வார் எனினும், இப்போதும் நாம் அவரின் உயிர்ப்பில் பங்குபெறவேண்டும் என ஆவல்கொள்கிறார். திருமுழுக்கு வழியாக நாம் அவரின் மரணம் மற்றும் உயிர்ப்பில் உட்புகுத்தப்பட்டு, புதிய வாழ்வின் அனுபவத்தைத் துவக்குகிறோம். முடிவற்ற நிலையின் விதை நமக்குள் விதைக்கப்பட்டுள்ளது. ஆகவே, முடிவற்ற நிலைகளின் சாயல் நம்மில் பதிக்கப்பட்டுள்ளது, மற்றும் அனைத்து மக்களின் வாழ்வையும் குறிப்பாக துன்புறுவோரின் வாழ்வையும் மதிக்கவேண்டும் என அது அழைக்கிறது. இதன் மூலம், நாம் இறையரசின் அருகாமையை அனுபவிக்க முடியும். அந்த அருகாமையை நோக்கியே நம் அனைவரின் ஒன்றிணைந்த பயணமும் இடம்பெறுகிறது.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.