2013-12-03 15:20:41

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்


டிச.03,2013. இன்று உலகில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள் அல்லது உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 15 விழுக்காட்டினர் ஏதாவது ஒரு விதத்தில் மாற்றுத்திறனோடு வாழும்வேளை, சமூகத்தில் இந்த மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார்.
டிசம்பர் 3, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு வலியுறுத்தியுள்ள பான் கி மூன்,
மாற்றுத்திறனாளிகள் குறித்த அமைப்புரீதியான பாகுபாட்டு மற்றும் தாழ்வான எண்ணங்கள் அகற்றப்பட்டு, இவர்கள், தங்களின் மாற்றுத்திறன்களோடு சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும், பங்கெடுக்கவும் அனுமதிக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் ஒன்றிணைத்து அவர்கள் சமமாக மதிக்கப்பட்டு நிலையான முன்னேற்றம் பெற ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி கூறுகிறது.
“சமூகத்தில் இணக்கப்படவும் அனைவரையும் முன்னேற்றவும் : தடைகளை அகற்று, கதவுகளைத் திறந்துவிடு” என்ற மையக்கருத்துடன் 2013ம் ஆண்டின் அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம் இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.