2013-12-03 15:20:51

நவீனகால அடிமைமுறை ஒழிக்கப்படுவதற்கு பான் கி மூன் வேண்டுகோள்


டிச.03,2013. டிசம்பர் 2, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக அடிமைத்தன ஒழிப்பு தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், இக்காலத்தில் இடம்பெறும் வெறுக்கத்தக்க அடிமைத்தனங்களின் பல்வேறு வடிவங்களை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
சமுதாயத்தில் ஏழைகளை, குறிப்பாக, குடியேற்றதாரர், பெண்கள், பாகுபடுத்தப்பட்ட இனக்குழுக்கள், சிறுபான்மையினர், பூர்வீக இனத்தவர் உட்பட சமூகரீதியாக அதிகம் ஒதுக்கப்பட்ட மக்களைப் பாதிக்கும் நவீனகால அடிமைமுறை மற்றும் கட்டாய உழைப்புமுறையை ஒழிப்பதற்கு உலகளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
இன்று உலகில் பெண்கள், ஆண்கள், சிறார் என, 2 கோடியே 10 இலட்சம் பேர் அடிமைமுறைகளில் சிக்கியுள்ளனர் என ILO உலக தொழில் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
“இப்பொழுதே அடிமைமுறை முடிவுறச்செய்” என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டின் அனைத்துலக அடிமைத்தன ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.