2013-12-03 14:28:31

டிச.,03,2013. காணாமற்போனவை பற்றிய உவமைகள். பகுதி-5. மகன்களும் சொல்லும் பாடங்கள்!


இளைய மகன் சொல்லும் கருத்து மாற்றம். மாற்றம் நம் வாழ்வில் எப்போதும் சாத்தியமே.

'நம்மால் முடியாது' என்பதல்ல உண்மை
'நாம் செய்வதில்லை' என்பதே உண்மை.
நம்மிடம் எவ்வளவு இருக்கிறது
என்பது முக்கியமல்ல.
நம்மிடம் இருப்பதைக் கொண்டு நாம்
என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நம்மிடம் இருப்பவற்றை நம்மால்
அவ்வளவாக மாற்ற முடியாதிருக்கலாம்
ஆனால் நம்மிடம் இருப்பவற்றை உபயோகிக்கும்
விதத்தை நிச்சயமாக நம்மால் மாற்ற இயலும்.
செம்மையாக உபயோகித்தால்
ஒரு சிப்பாய்கூட ராணியாக மாறலாம்.

ஓர் இரும்புத் துண்டின் விலை 250 ரூபாய்.
அதை ஒரு குதிரை லாடமாக உருவாக்கும்போது அதன் மதிப்பு 1000 ரூபாய்.
ஊசிகளாக மாற்றும் போது அதன் மதிப்பு 10,000 ரூபாய்.
கடிகாரத்திற்கான கம்பிச்சுருளாக மாற்றும்போது அதன் மதிப்பு 1,00,000 ரூபாய்.
உங்கள் சொந்த மதிப்பு நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ
அதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.
ஆனால், உங்களிலிருந்து நீங்கள் எதை உருவாக்குகிறீர்களோ அதைக்கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது.
நம் எடுத்துக்காட்டில் வரும் மூத்த மகன் நமக்கு பழைய ஏற்பாட்டு காயினை நினைவுபடுத்துகிறான்.
காயின் தன் சகோதரன் ஆபேல் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆனதற்காக அவன்மேல் பொறாமைப்படுகிறான். மூத்த மகன் தன் தம்பி தன் தந்தைக்கு ஏற்புடையவன் ஆனதற்காக அவன்மேல் பொறாமையும், கோபமும்படுகிறான். தன் தம்பியைக் கொல்கின்ற காயினைப் போல தன் தம்பியை தன் உள்ளத்திலிருந்து கொன்று விடுகிறான் மூத்த மகன்.
'உன் சகோதரன் எங்கே?' – காயினைப் பார்த்துக் கேட்கின்றார் கடவுள். காயினிடம் கேட்கப்பட்ட கேள்வி பதிலுக்காகக் கேட்கப்பட்டது அன்று. மாறாக, அவனுக்குத் தன் சகோதரன்மேல் உள்ள பொறுப்புணர்வை மறுஆய்வு செய்வதற்காகக் கேட்கப்பட்டது. 'ஆபேல் எங்கே?' என்று கேட்டிருந்தால், காயினின் பதில் சரியாக இருந்திருக்கும். ஆனால், 'உன் சகோதரன் எங்கே?' எனக் கேட்கின்றார் கடவுள். நாம் எல்லோருமே உறவினர்கள்தாம். உறவு என்றால் இருவகை என நினைப்போம்; இரத்த வகை, திருமண வகை. இரத்த வகை உறவு என்பது பெற்றோர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சித்தப்பா, பெரியப்பா, அண்ணன், தம்பி. திருமண வகை உறவு என்பது கணவன், மனைவி, மாமனார், மாமியார், மருமகன், மருமகள். விவிலியம் காட்டும் உறவு இன்னும் ஒருபடி செல்கின்றது; உடன்படிக்கை உறவு. இரத்தத்தினாலும், திருமணத்தினாலும் மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள ஈர்ப்பினால் உருவாக நட்பாய் மலரும் உறவே உடன்படிக்கை உறவு. உடன்படிக்கை உறவு சுட்டிக்காட்டும் ஒரு பண்பு; பொறுப்புணர்வு. நான் உனக்குப் பொறுப்பு. நீ எனக்குப் பொறுப்பு.
நாம் எல்லோருமே ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் இருக்கிறோம். நாம் கையிலெடுக்கும் ஒரு சோற்றுப்பருக்கையின் பின்னால் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? நெல்லை விதைத்த விவசாயி, நட்ட கூலிக்காரர், வயலுக்கு நீர் பாய்ச்சிய வேலைக்காரர், அதற்கு உரம் தயாரித்தவர், பூச்சி மருந்து தயாரித்தவர், அதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்த்தவர், அறுவடை செய்தவர். நெல்லை வைக்கோலிலிருந்து பிரித்தவர், ரைஸ் மில்லில் அரைத்தவர், அரைத்ததை சாக்கில் இட்டவர், சாக்கை நெய்தவர், சாக்கைத் தைத்தவர், வாகனத்தில் ஏற்றியவர் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் வேலை செய்வது வெறும் பணத்திற்காகவா? நம்மையறியாமலேயே ஒருவர் மற்றவர்மேல் ஏதோ பொறுப்புணர்வு இருக்கத்தானே செய்கிறது? அப்படியிருக்க, நாம் யார்மேலும் வன்முறையாய் நடந்து கொள்ள இடமேயில்லை.
காயினின் எதிர்கேள்வி. 'நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?' இதே கேள்வியைத் தான் மூத்த மகனும் இன்று தன் உள்ளத்தில் கேட்கின்றான். எபிரேய மொழியில் சொல்லப்பட்டதை அப்படியே மொழி பெயர்த்தால் இப்படி இருக்கும்; 'என் கண்களை எப்போதும் என் சகோதரன்மேலா வைத்திருக்க வேண்டும்?' ஒருவர் கண்விழித்திருக்கிறார் என்றால் அவர் ஒன்றின் மேல் பொறுப்பாய் இருக்கிறார் என அர்த்தம். காயின் தன் சகோதரன்மேலிருந்து தன் கண்களைத் திருப்பி விட்டான். அவனது பார்வை தன்னை நோக்கித் திரும்பிவிட்டது. நாம் அடுத்தவரை நோக்கி நம் கண்ககைளத் திருப்பினால் பிறர்நலம் வருகிறது. நம்மை நோக்கியே திருப்பினால் சுயநலம் வருகிறது. மூத்த மகன் தன் தம்பியின் மேலிருந்து தன் பார்வையைத் திருப்பிக் கொள்கிறான்.
இந்த இரண்டு கேள்விகளும் நமக்கு முன்வைப்பவை; பொறுப்புணர்வு. டெரிடா என்ற மெய்யியல் அறிஞர் இதை 'எதிக்ஸ் ஆஃப் ரெஸ்பான்சிபிலிட்டி' என்பார். நாம் ஒருவர் மற்றவர்மேல் பொறுப்பாய் இருப்பதே அறநெறி. அப்படியிருக்க நல்லவரோ, கெட்டவரோ அனைவரின்மேலும் நமக்குப் பொறுப்பு உண்டு.
ஒருமுறை ஒரு கணவர் தன் மனைவியின் பிறந்தநாளன்று அவருக்கு அழகியதொரு காரை பரிசளித்தார். முதலில் கார் சாவிகளைக் கொடுத்தார். பின் அவரது மனைவியின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காரின் முக்கிய ஆவணங்களை ஒரு ஃபைலில் வைத்துக் கொடுத்தார். கொடுத்துவிட்டு அன்பாக ஒரு புன்சிரிப்பையும் கொடுத்தார். அன்றைய தினம் குழந்தைகளை தான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு புதிய காரை ஓட்டிப் பார்த்து வருமாறு மனைவியை அனுப்புகின்றார். மனைவியும் நன்றி சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்படுகின்றார். ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் சென்றதுதான் தாமதம், காரை வேகமாக சாலையின் குறுக்குச் சுவற்றில் போய் இடிக்கின்றார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் காரின் முன்பகுதி மிகவும் பாதிக்கபட்டுவிடுகிறது. 'கணவரிடம் என்ன சொல்வேன்? 'நான் சொல்வதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?' என்று மனதுக்குள் குற்ற உணர்வுடன் புலம்புகிறார். விபத்து நடந்த இடத்திற்கு போலீஸ் உடனடியாக வந்துவிட்டார்கள். 'உங்க டிரைவிங் லைசன்ஸ் ப்ளீஸ்!' கேட்கிறார்கள் போலீஸார். நடுங்கிய கைகளுடன் தன் கணவர் கொடுத்த ஃபைலைத் திறக்கின்றார். கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது. ஃபைலைத் திறந்தவுடன் உள்ளே கணவரின் கையெழுத்துடன் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது; 'அன்பே, ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. நான் அன்பு செய்வது உன்னை. காரை அல்ல. அன்புடன், ஹென்றி.'
மனிதர்களை அன்பு செய்யவும், பொருள்களை பயன்படுத்தவும் வேண்டும். பொருள்களை அன்பு செய்து மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று கற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்.








All the contents on this site are copyrighted ©.