2013-12-02 16:54:14

திருத்தந்தை : பார்வையாளர்களாக அல்லாமல், நல்செயல்களின் காரணகர்த்தாக்களாக இருங்கள்


டிச.02,2013. கிறிஸ்தவத்தின் ஒழுக்கரீதி மற்றும் மத மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக இருப்பதன்மூலம் இன்றைய தவறான காலப்போக்குகளுக்கு எதிராகச் செல்லும் பலத்தைக் கண்டுகொள்ளமுடியும் என, உரோம் பல்கலைக்கழக மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த சனிக்கிழமையன்று மாலை உரோம் பல்கலைகழக மாணவர்களுடன் இணைந்து திருவருகைக்காலத்தின் முதல் நிகழழ்ச்சியை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய உலகின் நல்நிகழ்வுகளின் பார்வையாளர்களாக இல்லாமல், அவைகளின் காரணகர்த்தாக்களாக மாணவர்கள் திகழவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மதிப்பீடுகளின் சார்பாக, ஏழ்மைக்கு எதிராக, மனிதமாண்புகளுக்கான போராட்டத்தில் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளமையின் ஆர்வங்களை, ஆற்றல்களை மற்றவர்கள் திருடவோ, பலவீனமான சிந்தனைகளால் தங்களையே சிறைப்படுத்தவோ ஒருநாளும் அனுமதியாதீர்கள் என்ற வேண்டுகோளையும் உரோம் பல்கழக்கலைக்கழக மாணவர்களிடம் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.