2013-12-02 16:52:51

இஸ்ரேல் பிரதமர், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு


டிச.02,2013. இஸ்ரேல் பிரதமர் Binyamin Netanyahu அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் ஏறக்குறைய 25 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் முதன்முறையாக இடம்பெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார் இஸ்ரேல் பிரதமர் Netanyahu.
இஸ்ரேல், பாலஸ்தீனிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், சர்ச்சைக்குரிய ஈரானின் அணுத் திட்டங்கள், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கிறிஸ்தவர்களின் நிலை போன்ற விடயங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியரின் உரிமைகள் மதிக்கப்படும் சூழலில், நீதியும் நிலைத்ததுமான ஒரு தீர்வு விரைவில் காணப்படுமாறு இச்சந்திப்பில் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
அதேசமயம், மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீனிய பேச்சுவார்த்தைகளில் எதிர்கொள்ளப்படும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துக் கூறினார் Netanyahu.
ஆறு அமைச்சர் குழுவுடன் சென்ற இஸ்ரேல் பிரதமர், ஏழு திரிகள் கொண்ட இஸ்ரேலின் எண்ணெய் விளக்கையும், திருஅவை முறைமன்றம் பற்றி இஸ்பானியத்தில் தனது தந்தை எழுதிய நூலையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
இஸ்ரேலுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே அரசியல் உறவுகள் 1993ம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. இந்நாள்வரை மூன்று திருத்தந்தையர்கள் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முதலில், திருத்தந்தை 6ம் பவுல் 1964 ஆண்டில் எருசலேமுக்கு திருப்பயணம் மேற்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.