2013-11-30 16:41:27

வளர்இளம் பருவத்தினர் மத்தியில் HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பைத் தடுக்க முயற்சிகள் தேவை, யூனிசெப்


நவ.30,2013. 2005ம் ஆண்டிலிருந்து 8 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் வாழ்வு HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளவேளை, வளர்இளம் பருவத்தினர் மத்தியில் இந்நோய்க் கிருமிகளின் பாதிப்பு அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருப்பதாக, யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிறுவனம் கூறுகிறது.
டிசம்பர் 1, இஞ்ஞாயிறன்று உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யூனிசெப் நிறுவனம், 2005க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில், 10க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதினரின் எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய இறப்புகள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
2005ம் ஆண்டில் 5,40,000 குழந்தைகள் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டிருந்தனர். இவ்வெண்ணிக்கை 2012ம் ஆண்டில் 2,60,000மாக இருந்தது எனவும் யூனிசெப் நிறுவன ஆய்வறிக்கை கூறுகிறது.
“புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாத, புறக்கணித்தல் இல்லாத மற்றும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லாத நிலையை ஏற்படுத்துதல்” என்ற மையக் கருத்தில் இவ்வாண்டின் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், எய்ட்ஸ் நோயைத் தடுக்க அனைவரும் தன்னார்வ இரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.