2013-11-30 16:38:02

திருத்தந்தை பிரான்சிஸ் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோவிடம் : உலகுக்கு நம் பொதுவான சான்று அவசியம்


நவ.30,2013. இவ்வுலக சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்கு, கிறிஸ்தவம் தனது பங்களிப்பை அளிக்கும்போது அது நியாயமாய் நடத்தப்படவும், கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்தை பொதுவில் கடைப்பிடிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையை எல்லா இடங்களிலும் பாதுகாக்கவும் அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் உறுதியான ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித அந்திரேயாவின் விழாவான இச்சனிக்கிழமையன்று கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், உலகின் பல பாகங்களில் பாகுபாட்டை எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களையும், சில சமயங்களில் தங்கள் விசுவாசத்துக்காக இரத்தம் சிந்தும் கிறிஸ்தவர்களையும் புனித அந்திரேயாவின் மறைசாட்சி வாழ்வை நினைவுகூரும் இந்நாள் நினைக்க வைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை, போர், பசி, வறுமை மற்றும் கடும் இயற்கைப் பேரிடர்களால் நெருக்கடி நிலையில் வாழும் மக்களையும் இந்நாளில் நினைத்துப்பார்க்கும் அதேவேளை, உரையாடல், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய மூன்றுமே மோதல்களுக்குத் தீர்வை வழங்கும் எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.
மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களின் நிலை குறித்தும், அக்கிறிஸ்தவர்கள் தங்களின் தாயகங்களில் வாழ்வதற்கான உரிமை குறித்தும் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ கொண்டுள்ள அக்கறையை தான் அறிந்துள்ளதாகவும், இப்பகுதியின் அமைதி, ஒப்புரவுக்காகவும், மக்களின் நியாயமான உரிமைகள் ஏற்கப்படவும் நாம் தொடர்ந்து உழைப்போம் எனவும் அச்செய்தியில் உறுதி கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கான்ஸ்டான்டிநோபிள் சென்றுள்ள திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை வாசித்தளித்தார்.
புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவான ஜூன் 29ம் தேதியன்று கான்ஸ்டான்டிநோபிள் பிரதிநிதிகள் குழு வத்திக்கான் வருவதும், புனித அந்திரேயாவின் விழாவான நவம்பர் 30ம் தேதியன்று வத்திக்கான் பிரதிநிதிகள் குழு கான்ஸ்டான்டிநோபிள் செல்வதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.