2013-11-30 16:45:23

சிறு வயது திருமணத்தைத் தவிர்க்க தேசிய பெண் குழந்தை தினம் பரிந்துரை


நவ.30,2013. சிறு வயது திருமணங்களைத் தவிர்க்கவும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜனவரி, 24ம் தேதியை தேசிய பெண் குழந்தை தினமாக அனுசரிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறு வயது திருமணம் வட மாநிலங்களிலும் அதிகளவில் நடப்பதால், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசு இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிறு வயது திருமணங்களை முக்கிய பிரச்சனையாக, மாநில அரசுகள் எடுத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு வயது திருமணங்களால் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலையை மாற்ற வேண்டும். பெண்ணுக்குத் திருமணத்திற்கான வயது 18 என்ற போதிலும், 18ல் இருந்து, 29 வயதுக்குள் திருமணம் நடத்தினால்தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண் குழந்தைகள் வெற்றி பெற முடியும். ஆண்களுக்கு, 21 வயது என்ற போதிலும், 21 முதல், 29 வயதுக்குள் திருமணம் நடந்தால்தான், அவர்களது எதிர்காலம் சிறப்படையும். இத்தகையக் கருத்துகள் குறித்த விழிப்புணர்வை இளம்பருவத்தினரிடம் ஏற்படுத்த வேண்டும்.
சிறு வயது திருமணங்களைத் தவிர்க்க, மாவட்ட அளவில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்றவை அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சில நாட்களுக்குமுன், சென்னை, சோழவரத்தில், பிளஸ் 2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை, சமூக நலத்துறை அதிகாரிகள், தடுத்து நிறுத்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலும், சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.