2013-11-30 16:37:48

சிரியாவில் வன்முறை நிறுத்தப்பட திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் அழைப்பு


நவ.30,2013. சிரியாவில் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் எப்பொழுதும் தனது நினைவில் இருப்பதாகவும், தங்களின் வாழ்வையும், தங்களின் அன்புறவுகளையும் இழந்தவர்களை எப்பொழுதும் நினைத்துச் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமையில் வாழும் கிரேக்க மெல்கித்தே வழிபாட்டுமுறை கத்தோலிக்கரில் 300 பேரை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இச்சனிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு
செபம் மற்றும் ஒப்புரவின் வலிமையை நாம் உறுதியாக நம்பியருக்கிறோம் எனக் கூறினார்.
சிரியாவில் வன்முறையை நிறுத்துவதற்குப் பொறுப்பானவர்களுக்கு மீண்டும் நாம் அழைப்புவிடுப்போம் என உரைத்த திருத்தந்தை, சிரியாவில், ஏற்கனவே மிக அதிகமான அழிவுகளைக் கொண்டுவந்துள்ள சண்டைக்கு நீதியும் நிரந்தரமானதுமான தீர்வை உரையாடல் மூலம் அவர்கள் கண்டுணரட்டும் எனவும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களில் பலர் உலகின் பல பாகங்களில் வாழ்ந்து வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இக்கிறிஸ்தவர்கள் தங்களின் மெல்கித்தே வழிபாட்டுமுறையின் மனித மற்றும் ஆன்மீக மரபுகளில் ஊன்றியிருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
புனித பேதுருவின் சகோதரராகிய புனித அந்திரேயாவின் விழாவான இந்நாளில், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபையினர் அனைவரையும் சிறப்பாக நினைப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.