2013-11-30 16:42:40

இந்தியாவில் மூன்றில் ஓர் இளையோர்க்கு வேலை இல்லை


நவ.30,2013. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.
“இளையோர் வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை,2012-2013” என்ற தலைப்பில், சண்டிகாரிலுள்ள தொழில் அமைச்சகப் பிரிவு நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளையோரில் மூன்றில் ஒருவர் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் இளையோரிடையே உள்ள வேலைவாய்ப்பு குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோரிடையே அதிகளவில் வேலை வாய்ப்பின்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்பி்ன்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 36.6 விழுக்காடாகவும், புறநகர் பகுதிகளில் இதன் விகிதம் 26.5 விழுக்காடாகவும் காணப்படுகிறது. அதேநேரத்தில் எவ்விதக் கல்வியறிவு இல்லாத 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளையோரிடையேயான வேலைவாய்ப்பின்மை 3.7 விழுக்காடாகவும் காணப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் முதல் 2013ம் ஆண்டு மே வரையில் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், மாவட்டங்கள் என ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 354 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதி்ல் 82 ஆயிரத்து 624 வீடுகள் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும், 50 ஆயிரத்து 730 வீடுகள் கிராமப்புறங்களிலும் கணக்கில் கொள்ளப்பட்டது.

ஆதாரம் : PTI







All the contents on this site are copyrighted ©.