2013-11-29 15:16:55

இலங்கையில் ஓர் அருள்பணியாளருக்கு மிரட்டல் : ஆயர் கவலை


நவ.29,2013. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் திருகோணமலையிலுள்ள குவாதலூப்பே ஆலய பங்குத் தந்தைக்கு புலனாய்வுத் துறையினர் என தங்களை அடையாளப்படுத்திய நபர்களினால் துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக திருகோணமலை ஆயர் கிங்ஸிலி சுவாமிபிள்ளை தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு முதல் நாள், செவ்வாய்கிழமை இரவு இலக்கமற்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஆலயத்திற்கு வந்த இருவர், துப்பாக்கிமுனையில் பங்குத் தந்தையான அருட்திரு எஸ்.எஸ். ஜோன்பிள்ளைக்கு இந்த அச்சுறுத்தலை விடுத்துச் சென்றுள்ளதாக ஊடகச் செய்திக் குறிப்பு கூறுகின்றது.
குறித்த நபர்கள் தங்களை புலனாய்வுத் துறை எனக் கூறிய போது அதிகாரபூர்வ அடையாள அட்டையை காட்டுமாறு அருள்தந்தை அந்நபர்களைக் கேட்டபோது அந்நபர்கள் அவரது உடையைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளிவிட்டு வெளியேறும்போது இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு, இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளார்.
இதற்கிடையே, இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி முனையில் அருள்திரு ஜோன்பிள்ளையை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் திருகோணமலை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆதாரம் : TamilNet







All the contents on this site are copyrighted ©.