2013-11-27 16:05:41

லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்குத் திருஅவையின் நலவாழ்வுப் பணி


நவ.27,2013. போரால் துன்புறும் சிரியா நாட்டு மக்களுக்கு இனம், மதம் என்ற பாகுபாடின்றி உதவுவது, அந்நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நேரிடையான பாதையாக உள்ளது என, திருப்பீட “கோர் ஊனும்”(Cor Unum)பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் இராபெர்ட் சாரா கூறினார்.
திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை, உரோம் பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனை, லெபனன் காரித்தாஸ் ஆகிய மூன்றும் இணைந்து, “லெபனனிலுள்ள சிரியா நாட்டுச் சிறார் அகதிகளுக்கு நலவாழ்வுப் பணி” என்ற திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இப்புதனன்று திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் இடம்பெற்ற நிருபர் கூட்டத்தில் இவ்வாறு கூறிய கர்தினால் சாரா, இச்சிறாருக்கு உதவும் இத்திட்டத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள் தூண்டுகோலாய் இருந்தன எனவும் கூறினார்.
கர்தினால் சாரா, பம்பினோ ஜேசு குழந்தைகள் மருத்துவமனை தலைவர் Giuseppe Profiti, இம்மருத்துவமனையின் தோல் பிரிவுத்துறை இயக்குனர் May El Hachem, லெபனன் காரித்தாஸ் தலைவர் அருள்பணி Simon Faddoul ஆகியோர் இந்நிருபர் கூட்டத்தில் பேசினர்.
இத்திட்டத்தின்மூலம், போரினால் துன்புற்றுள்ள சிரியாக் குழந்தைகள் மீண்டும் சிரித்து மகிழவும், தங்கள் வாழ்வில் உடல் மற்றும் ஆன்மீகத் தேவைகளைப் பெறவும் இயலும் என்றும் கர்தினால் சாரா கூறினார்.
ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் கணிப்புப்படி, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் உள்ளனர், இவர்களில் 7இலட்சம் பேர் லெபனனில் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.