2013-11-27 16:14:17

லிபியாவில் அமைதி ஏற்படும், ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி நம்பிக்கை


நவ.27,2013. லிபியாவில் தற்போது நிச்சயமற்றநிலை காணப்படுகின்றபோதிலும், அந்நாட்டில் அமைதி ஏற்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார் லிபியத் தலைநகர் ட்ரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி.
லிபியாவில் அமைதி ஏற்பட வேண்டுமென்று பொதுமக்கள் அழுத்தம் கொடுத்து வருவது, அந்நாட்டில் எந்த நேரத்திலும் அமைதி வெடிக்கலாம் என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார் ஆயர் மார்த்தினெல்லி.
பென்காசி மற்றும் ட்ரிப்போலி நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பல்வேறு புரட்சிக்குழுக்கள் அந்நகரங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்று இம்மாதம் 15ம் தேதி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டது பற்றிக் கூறிய ஆயர் மார்த்தினெல்லி, இந்தப் புரட்சிக்குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அவ்விடங்களைவிட்டு வெளியேறுவதன்மூலம், பாதுகாப்புப் படையினர் தங்களது நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும் என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்தப் பொது மக்கள் போராட்டங்களில் 46 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், பென்காசியில் இசுலாமிய புரட்சிப்படைக்கும், இராணுவத்துக்கும் இடையே இத்திங்களன்று இடம்பெற்ற மோதலில் 9 பேர் இறந்தனர் மற்றும் 51 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.