2013-11-27 16:15:52

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் படுகொலை


நவ.27,2013. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காக அதிக அளவில் தாய்மார்கள் கொல்லப்பட்டுவரும்வேளை, கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் 2013ம் ஆண்டு செப்டம்பர் வரை இக்காரணத்திற்காக 56 தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் இத்திங்களன்று தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு எதிராக அமிலம் வீசிய 90 வழக்குகளும், உயிருடன் எரிக்கப்பட்ட 72 வழக்குகளும், குடும்ப வன்முறையில் 491 வழக்குகளும், பாலியல் வன்செயலில் 344 வழக்குகளும், மற்ற வன்முறைச் சம்பவங்களில் 835 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மகளிர்க்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு APWA என்ற அனைத்து பாகிஸ்தான் மகளிர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய ரஹ்மான், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்திற்காகத் தாய்மார்களைக் கொலைசெய்யும் ஒரு நாடு, நன்னெறிசார்ந்த சமூகம் என அழைக்கப்பட தகுதியற்றது எனவும் குறை கூறினார்.
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்குத்தான் முக்கியத்துவம்
அளிக்கப்படுகின்றது.

ஆதாரம் : LifeNews







All the contents on this site are copyrighted ©.