2013-11-27 15:07:03

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


நவ.,27,2013. இத்தாலியின் வடபகுதியிலும், உரோம் நகரைச்சுற்றியுள்ள இடங்களிலும் பனிபெய்துகொண்டிருக்க, இவைகளின் தாக்கத்தால் உரோம் நகரை குளிர் இரவும் பகலும் வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், புதன்பொதுமறைபோதகத்தில் பங்குபெறவிரும்பும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இப்புதனின் மறைபோதகம் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடியிருக்க, கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் சிந்தகனைகளைத் திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கை ஆண்டில் துவக்கப்பட்ட, கத்தோலிக்க விசுவாச அறிக்கை குறித்த நம் மறைபோதகத்தில் இன்று, இத்தொடரின் இறுதிப்பகுதியாக, 'இறந்தோரின் உயிர்ப்பு' குறித்து சிந்திப்போம். கிறிஸ்தவ விசுவாசமானது, இறப்பு எனும் மறையுண்மைக்கு ஒளியூட்டி, உயிர்ப்பு குறித்த நம்பிக்கையைக் கொணர்கிறது. மரணம் என்பது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. கடவுளின் மீதான நம்பிக்கை, மற்றும், இவ்வுலகின் நம் வாழ்வைவிட மேலான ஒரு வாழ்வு குறித்த ஒரு கண்ணோட்டம் இருக்கின்றபோதிலும், மரணம் என்பது எப்போதும் துயர் நிறைந்ததாகவே தோற்றம் தருகிறது. நாம் அதனை தவறாகப் புரிந்துகொள்வதுடன், அது குறித்து அஞ்சி, அதனை மறுக்கவும் செய்கிறோம். இருப்பினும் மனிதர்கள் உன்னதமான ஒன்றை நோக்கி படைக்கப்பட்டுள்ளார்கள், முடிவற்ற ஒன்றிற்காக, நிலையான ஒன்றிற்காக நம் மனம் ஏங்குகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பு, மரணத்தைத் தாண்டிய வாழ்வின் நிச்சயத்தை மட்டும் நமக்கு வழங்கவில்லை, மரணத்தின் உண்மை அர்த்தத்தையும் நமக்குக் காண்பிக்கிறது. நாம் எவ்வாறு வாழ்கிறோமோ அவ்வாறே நம் மரணமும் இடம்பெறுகிறது.
கிறிஸ்துவுடனான அன்பு ஒன்றிப்பில் நம் வாழ்வை நடத்திச்செல்வோமானால், நாம் தங்குதடையற்ற மனநிலையுடனும், முழுநம்பிக்கையுடனும், சாந்தமுடன் நம் மரணவேளையில் நம்மை இறைவன் கைகளில் ஒப்படைப்போம். இவ்வுலகில் நம் வாழ்வானது, வரவிருக்கும் வாழ்வுக்கான தயாரிப்பு என்பதால் நாம் எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டும் என நமதாண்டவர் நம்மிடம் எடுத்துரைக்கிறார். நாம் இறைவனுக்கு நெருக்கமாக இருப்போமானால், குறிப்பாக, ஏழைகளுக்கு ஆற்றும் பிறரன்பு உதவிகள், மற்றும் உதவித்தேவைப்படுபவர்களுடனான ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் இறைவனுடன் நெருக்கமாக இருக்கும்போது, நாம் மரணத்தைக்கண்டு அஞ்சத் தேவையில்லை. மாறாக, அதனை விண்ணுலக வாழ்விற்கான கதவாகவும், முடிவற்ற வாழ்வுக்கான மகிழ்வாகவும் வரவேற்போம்.
இவ்வாறு தன் இவ்வார புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.