2013-11-27 16:07:11

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைத்தூது அறிவுரை ஏடு, திருஅவையின் வருங்காலத்தின் வரைபடம், திருப்பீட அதிகாரிகள்


நவ.27,2013. தான் எதிர்நோக்கும் சவால்களை ஏற்கும்அதேவேளை, கடவுளின் அன்பும் அவரின் மேலாண்மையுமே மேலோங்கும் என்பதை திருஅவை அறிந்துள்ளது என்பதை Evangelii Gaudium ஏடு வெளிப்படுத்தியுள்ளது என, திருப்பீட அதிகாரிகள் தெரிவித்தனர்.
"Evangelii Gaudium" அதாவது நற்செய்தியின் மகிழ்ச்சி என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் மறைத்தூது அறிவுரை ஏட்டை இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய திருப்பீட அதிகாரிகள், இவ்வேடு, விசுவாசம் நிறைந்த நம்பிக்கை வாழ்வுக்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினர்.
இந்நிருபர் கூட்டத்தில் பேசிய, நற்செய்தி அறிவிப்பைப் புதிய முறையில் செய்வதை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா, தற்போதைய சவால்களைப் புறக்கணிக்காமல், உண்மைத்தன்மையின் இறைவாக்கு மற்றும் நேர்மறைக் கண்ணோட்டத்தை மீண்டும் கண்டுணர, திருஅவைக்கு அழைப்பு விடுப்பதாக இவ்வேடு உள்ளது என்று கூறினார்.
திருஅவை எப்பொழுதும் மறைப்போதகராக இருக்க வேண்டும் என்றோ அல்லது மறையுரைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ அல்லது திருஅவை முதலில் ஏழைகளுக்குப் பணியாற்றுதல் பற்றியோ அல்லது திருஅவை எப்பொழுதும் கருவில் வளரும் குழந்தையின் வாழ்வுக்கு ஆதரவாக இருக்கும் என்பது குறித்தோ திருத்தந்தை எழுதும்போது, இந்த அனைத்துத் தலைப்புகளும் கடவுளின் கருணைநிறை அன்பில் கவனம் செலுத்துவதாக உள்ளன என்று கூறினார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
மேலும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய திருப்பீட சமூகத்தொடர்புத் துறைத் தலைவர் பேராயர் கிளவ்தியோ சேல்லி, "Evangelii Gaudium" என்ற மறைத்தூது அறிவுரை ஏடு, தனித்துவமிக்க மற்றும் ஆழமான மேய்ப்புப்பணி உணர்வைக் கொண்டுள்ளது என்றுரைத்தார்.
இன்னும், இந்நிருபர் கூட்டத்தில் பேசிய உலக ஆயர்கள் மாமன்றச் செயலர் பேராயர் லொரென்சோ பால்திச்சேரி, நற்செய்தி அறிவிப்பைப் புதிய முறையில் ஆற்றுவது குறித்து 2012ம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றப் பரிந்துரைகளைக் கவனத்தில்கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சொந்தப் பாணியில் இவ்வேட்டை அமைத்துள்ளார் என்று கூறினார்.
"Evangelii Gaudium" என்ற மறைத்தூது அறிவுரை ஏட்டின் பெரும் பகுதியை, கடந்த ஆகஸ்டில் கோடை விடுமுறையின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தானே இஸ்பானியத்தில் எழுதினார் என்று திருப்பீடச் செயலர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி இந்நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.