2013-11-26 15:50:18

பெண்களுக்கு எதிரான வன்முறை, ஒரு சமூகச் சவால், மெக்சிகோ ஆயர்


நவ.26,2013. பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் சமூகத்துக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்வேளை, இந்தக் கடும் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்படுத்தவேண்டியது மிகவும் இன்றியமையாதது என்று, மெக்சிகோ நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
இத்திங்களன்று உலகில் கடைப்பிடிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி இவ்வாறு தெரிவித்த, துரான்கோ மறைமாவட்ட துணை ஆயர் Enrique Sánchez Martínez, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகரீதியாக சகித்துக்கொள்ளப்படும் ஒரு செயலாக மாறி வருவதால், இவை ஒரு சமூக மற்றும் கலாச்சாரச் சவாலாக உள்ளன என்று கூறினார்.
இந்த வன்முறைகளுக்கு, பொருளாதார நிலை, குடிபோதை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை நேரடிக் காரணங்களாக இல்லாவிட்டாலும், குடும்பத்திலும், சமூக வாழ்விலும் பாலியல் சமத்துவமின்மை நிலவுவதே இப்பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினார் ஆயர் Sánchez.
மெக்சிகோவில் ஒவ்வோர் ஆண்டும் 1,20,000 பாலியல் வன்செயல்கள் நடக்கின்றன, இவற்றில் 1,06,000 புகார்கள், கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்ற தேசிய மகளிர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதையும் ஆயர் Sánchez சுட்டிக்காட்டினார்.
இன்று உலகில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது வன்முறைக்கு உள்ளாகின்றனர் என, ஐ.நா. அறிவித்துள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.