2013-11-26 15:57:06

உணவுப் பாதுகாப்பு வழங்கும் கிராமம்


நவ.26,2013. அசாம் மாநிலத்தில், இலட்சுமிபூர் மாவட்டத்தின், சராய்டோலினி கிராமத்தில் யாரும் பசியால் வெறும் வயிற்றுடன் தூங்கக்கூடாது என்ற கொள்கையில், ஏழைகளின் பசியைப் போக்குவதற்கு என்றே, தனியாக உணவுத் தானியங்கள் பயிரிடுவதை, கடந்த, 50 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது அக்கிராமம்.
ஆயிரம் பேர் வாழ்கின்ற இந்தக் கிராமத்தில் நிலம் வைத்திருக்கும் மக்கள், தானமாக அளித்த நிலம் சில ஏக்கர் உள்ளது. வறுமையில் உள்ள ஏழை மக்களின் பசியைப் போக்கும் வகையில், இந்த நிலத்தில் பயிரிடப்படும், உணவு தானியங்கள் முழுக்க முழுக்க, ஏழைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 1961ம் ஆண்டு முதல் சமூக பொறுப்புடனும், மனித நேயத்துடன் இதனைச் செய்து வருகிறது இக்கிராமம்.
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்கள் உட்பட, அனைத்து தரப்பு மக்களுக்கும், உணவு வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அனைத்து மக்களுக்கும், நியாயமான விலையில், உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்வதுதான், இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், இந்த சட்டம் வருவதற்கு, முன்பே, இந்த சராய்டோலினி கிராமம் ஏழை மக்களுக்காக, தனியாக நிலம் ஒதுக்கி, உணவு தானியங்களைப் பயிரிட்டு வருகிறது.
பயிர் விளைந்ததும், இவற்றை அறுவடை செய்து, பொதுவான இடத்திற்கு கொண்டு வருகின்றனர். பொது நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, ஏழை மக்களுக்கு அந்த விளைச்சலை பங்கிட்டு வழங்குகின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பூமி தான இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான, வினோபா பாவே இந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார். அவரின், பூமி தான இயக்கம் பற்றி கேட்ட, இவ்வூர் மக்கள், அதன்பின் உருவாக்கியதுதான் இத்திட்டம்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.