2013-11-25 16:11:19

இறைவனுக்கான தாகம் உலகின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது, திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.25,2013. இறைவனுக்கான தாகம், ஆண்டவர் மீதான ஆன்மாவின் தாகம் உலகின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிறது என இச்சனிக்கிழமை மாலையில் திருஅவையில் புதிதாக இணையவிருப்பவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் புதிதாக இணையவிருக்கும் 47 நாடுகளின் 500 பேரை, இச்சனிக்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய முகப்பில் வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்ற கேள்வியை எழுப்பி அவர்களைப் பசிலிக்காவுக்குள் அழைத்துவந்தார்.
விசுவாசத்தை எதிர்பார்க்கிறோம் என்று பதில் சொன்ன இவர்களில் 36 பேரின் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு, அவர்கள் அனைவருடனும் மாலை திருவழிபாட்டை நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு அனுபவங்களைக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் பொதுவாக ஒன்று உள்ளது, அதுவே இறைவனுக்கான தாகம் என்று கூறினார்.
இறைவனும் நமக்காகத் தாகம் கொண்டுள்ளார், அவர் நம்மோடு இருக்க விரும்புகிறார், இந்தத் தாகமின்றி விசுவாச வளர்ச்சி மக்கிப்போய்விடும் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு உங்களை அன்புசெய்கிறார், அவர் ஒருபோதும் உங்களை மறுதலிக்கமாட்டார், அவர் ஒருபோதும் தவறிழைக்கமாட்டார் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் எனவும் அந்த 500 பேரிடம் கூறினார்.
திருத்தூதர் பேதுருவின் புனிதப்பொருள்கள் இருக்கும் இந்த பசிலிக்காவில் உங்களனைவரையும் வரவேற்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த திருத்தந்தை, மனுஉரு எடுத்த இறைவார்த்தையால் தொடப்பட்டுள்ள நீங்கள் அவரின் இரக்கத்தையும் பெறுவதற்குத் தயார்ப்படுத்தியுள்ளீர்கள், நீங்கள் அவரோடு முழு ஒன்றிப்பை அடையுமாறு திருஅவை உங்களிடம் கேட்கிறது என்றும் கூறினார்.
நம்பிக்கை ஆண்டு நிறைவடைவதற்குமுன் இறுதி நிகழ்வாக இடம்பெற்ற இம்மாலை திருவழிபாட்டில், இந்த 500 பேரைத் தயாரித்த வேதியர்கள், குடும்பத்தினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.