2013-11-23 15:51:15

புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் வரலாற்றில் முதன்முறையாக பொதுவில் வைக்கப்படவுள்ளன


நவ.23,2013. கத்தோலிக்கத் திருஅவையின் முதல் திருத்தந்தையாகிய புனித பேதுருவின் எலும்புகள் அடங்கிய பேழை ஏறக்குறைய கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் முதல்தடவையாக இஞ்ஞாயிறன்று பொதுவில் வைக்கப்படவுள்ளது.
கி.பி.64ம் ஆண்டில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட புனித பேதுருவின் கல்லறைமீது வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயம் கட்டப்பட்டுள்ளது.
1940களில் இக்கல்லறைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது புனித பேதுருவின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. புனித பேதுருவின் இப்புனிதப்பொருள்கள், 30 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் கொண்ட வெண்கலப் பேழையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பேழை, வத்திக்கானில் திருத்தந்தையரின் உறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 29ம் தேதியன்று வத்திக்கானில் திருத்தந்தையரின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு பின் அங்கிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
இஞ்ஞாயிறன்று நம்பிக்கை ஆண்டு நிறைவடைவதையொட்டி இப்புனிதப் பேழை முதல்தடவையாக பொதுவில் வைக்கப்படவுள்ளது. ஞாயிறு காலை 9.45 மணிக்குப் பவனியாக இது எடுத்துவரப்பட்டு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் திருப்பலி மேடைப் பகுதியில் வைக்கப்படும். திருப்பலிக்குப் பின்னர் அது மீண்டும் திருத்தந்தையரின் உறைவிடத்துக்குக் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.