2013-11-22 15:59:15

நாம் ஆலயத்துக்குச் செல்வது இறைவனைத் தொழுவதற்காகவே : திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.22,2013. செபிக்கவும், இறைவனைப் புகழவும் அவருக்கு நன்றி கூறவும் நாம் செல்லும் ஒரு புனிதமான இடம் ஆலயம், அங்கு கொண்டாட்டங்களைவிட இறைவனை வழிபடுவதே மிக முக்கியம் என்று, இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேமில் போரினால் அழிக்கப்பட்ட பழமையான ஆலயத்தை யூதாவும் அவருடைய சகோதரர்களும் மீண்டும் தூய்மைப்படுத்தியது பற்றிக் கூறும் இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, இறைமக்கள் சமுதாயம் முழுவதற்கும் ஆலயம் மைய இடமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
நம் வழிபாடுகளில் இடம்பெறும் இசை, அழகு, வழிபாட்டுமுறைகள்... இவையனைத்தையும்விட, பலிபீடத்தைச் சுற்றிக் கூடியுள்ள சமூகத்தின் முழுக்கவனமெல்லாம் இறைவனை வழிபடுவதிலேயே இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், அன்று ஆலயத்தில் வணிகம் செய்தவர்களை இயேசு விரட்டியடித்ததைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒவ்வொரு தனிமனிதரின் அகவாழ்வை ஆலயமாகப் பேசிய திருத்தந்தை, அங்கே நம் அன்றாட வாழ்வில் இறைவனை வழிபட்டு அவரின் கட்டளைகளைப் பின்தொடர முயற்சிக்கிறோம் என்றும் உரைத்தார்.
தூய ஆவியின் ஆலயமாக விளங்கும் மனிதர், இறைவன் தனக்குள் பேசுவதை உற்றுக்கேட்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவரைப் பின்தொடர வேண்டும் என்றும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் எல்லாரும் பாவிகள் என்பதால், இறைவனின் வார்த்தையைப் பின்செல்வதற்கு, ஒப்புரவு அருள்சாதனம், திருநற்கருணை திருவருள்சாதனங்கள், மனம்வருந்துதல் போன்றவை மூலம் தூய்மைப்படுத்துதல் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.