2013-11-22 15:59:04

திருத்தந்தை பிரான்சிஸ், போஸ்னிய-எர்செகொவினா பிரதமர் சந்திப்பு


நவ.22,2013. போஸ்னிய-எர்செகொவினா குடியரசின் பிரதமர் Viekoslav Bevada, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏறக்குறைய 25 நிமிடங்கள் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் பிரதமர் Bevada.
போஸ்னியாவின் தற்போதைய நிலை, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அந்நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பது, அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படல் உட்பட பல விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றன என திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
திருப்பீடத்துக்கும், போஸ்னியாவுக்கும் இடையே 2006ம் ஆண்டில் இடம்பெற்ற ஒப்பந்தம் நன்முறையில் நடைமுறையில் இருப்பது குறித்த திருப்தியும் இச்சந்திப்பில்
தெரிவிக்கப்பட்டதென, அப்பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது
இரு மகளிர் உட்பட எட்டுப் பேர் அடங்கிய குழுவுடன் திருப்பீடம் சென்றிருந்த போஸ்னியப் பிரதமர் Bevada, சிரில் என போஸ்னிய மொழியில் பொறிக்கப்பட்ட 1400ம் ஆண்டின் பழமைவாய்ந்த கல் ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
போஸ்னிய-எர்செகொவினா, பால்கன் தீபகற்பத்தில் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குடியரசாகும். இது சில சமயங்களில் போஸ்னியா என்றும் அழைக்கப்படுகிறது. இக்குடியரசு, 1992ம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று, முன்னாள் யூக்கோஸ்லாவியாவிலிருந்து பிரிவதாக அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.