2013-11-21 15:17:13

திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் பகுதிகளில், மதசுதந்திரத்தின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படவேண்டும்


நவ.,21,2013. மத்தியக்கிழக்குப் பகுதியில், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் பகுதிகளில், மதசுதந்திரத்தின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் காலையில் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளின் தலைவர்களையும் அவைகளின் பிரதிநிதிகளையும் இரு பிரிவுகளாக சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபைகளின் ஆன்மீகப் பாரம்பரியத்தை குறித்த தன் உயர்மதிப்பீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்பு கிட்டியதற்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.
அனைத்து வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருப்பதற்கு, நாம் எப்போதும் நீதி, கருணை, விசுவாசம், பிறரன்பு, பொறுமை மற்றும் தாழ்ச்சியுணர்வைத் தேடுபவர்களாக இருக்கவேண்டும் என கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளின் தலைவர்களிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கான திருப்பேராயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை தனியாகச் சந்தித்த திருத்தந்தை, கம்யூனிச ஆட்சியின்கீழ் சித்ரவதைகளை அனுபவித்த கிறிஸ்தவ சபைகள், மற்றும் தற்போதும் மத்தியக்கிழக்குப் பகுதியில் சிறுபான்மையினராக வாழ்ந்து அடக்குமுறைகளை அனுபவிக்கும் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் குறித்தும் தன் நன்மதிப்பை வெளியிட்டார்.
எகிப்து, சிரியா மற்றும் ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.