2013-11-21 14:48:39

கற்றனைத்தூறும்..... 2014 : அனைத்துலக விவசாயக் குடும்பங்கள் ஆண்டு


2011ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொது அவையின் 66வது அமர்வில், 2014ம் ஆண்டை, அனைத்துலக விவசாயக் குடும்பங்கள் ஆண்டாகக் கடைப்பிடிப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2011ம் ஆண்டு ஜூன்-ஜூலையில் FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட 55 நாடுகளின் 360 நிறுவனங்கள் எடுத்த முயற்சியின் பலனாக இந்த அனைத்துலக விவசாயக் குடும்பங்கள் ஆண்டு ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயக் குடும்பங்கள் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக, நவம்பர் 22, இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நியுயார்க் தலைமையகத்தில் தொடங்கப்படவுள்ளது. உணவுப் பாதுகாப்பு, ஏழ்மை ஒழிப்பு, பாலியல் சமத்துவம், இளையோர்க்கு வாய்ப்புகள், மற்றும் பிற விவகாரங்களில் உலகை முன்னேற்றுவதற்கு விவசாயக் குடும்பங்கள் எவ்வளவு வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளன என்பதை வலியுறுத்தவே FAO நிறுவனம், இத்தகைய ஓர் ஆண்டு அறிவிக்கப்பட வேண்டுமென்று விரும்பியது. இந்த அனைத்துலக விவசாயக் குடும்பங்கள் ஆண்டு, உலக கிராம அமைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான வேளாண் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படுகின்றது. விவசாயியின் உறுதியான வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது இந்த அனைத்துலக ஆண்டில் வலியுறுத்தப்படும். உலகில் ஏழ்மையைக் குறைப்பதிலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை அகற்றுவதிலும் உலகின் வேளாண் அமைப்புகள் முக்கியமானவை. “உலகைப் போஷிக்க, இப்பூமிக்கோளத்தின்மீது அக்கறை காட்ட” என்ற சுலோகத்துடன் இந்த ஆண்டு கடைப்பிடிக்கப்படும். 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களைக் கொண்ட இலங்கை ஒரு காலத்தில் ஆசியாவின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்தது. இந்தியாவில் 6 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால் நாட்டில் 4 கோடியே 34 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்குக் கடன்சுமை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : இணையத்திலிருந்து







All the contents on this site are copyrighted ©.