2013-11-20 15:50:08

மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் 2007ம் ஆண்டின் உலக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட திருப்பீடம் அழைப்பு


நவ.20,2013. மீன்பிடித்தொழிலாளரின் பாதுகாப்பு, அவர்களுக்குரிய மருத்துவப் பராமரிப்பு, போதுமான ஓய்வு நேரம், வேலை ஒப்பந்தப் பாதுகாப்பு மற்றும் மீன்வளத் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர்க்குரிய சமூகநல உதவிகள் ஆகியவற்றுக்கு உறுதியளிக்கும் 2007ம் ஆண்டின் ஒப்பந்தம் விரைவில் செயல்படுத்தப்படுமாறு அனைத்து அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது திருப்பீடம்.
நவம்பர் 21, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்படும் உலக மீன்வள நாளையொட்டி திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவை வெளியிட்டுள்ள செய்தியில், அண்மை ஆண்டுகளாக மீன்பிடித் தொழில், இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது என்றும், மீன்வளங்கள் மற்றும் மீன்கள் இனப்பெருக்கக் காலம் குறித்து மிகச்சிறிதளவே அக்கறை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகப் பணத்தை ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தில், அனைத்து மீன்வளத் துறைகளும் தங்கள் தொழிலாளர்களை, மோசமான காலநிலையிலும்கூட சிலநேரங்களில் நீண்டநேரம் மீன்பிடிக்க வைப்பது உட்பட்ட செயல்கள் தொழிலாளருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பையும் இச்செய்தி கோடிட்டுக் காட்டியுள்ளது.
பிலிப்பீன்சில் ஹையான் புயலில் இறந்தவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் மீனவர்கள் என்றும், இப்புயலில் பாதிக்கப்பட்டவர்க்கென சிறப்பு நிதி சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இச்செய்தியில் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அவ்வவையின் செயலர் ஆயர் Joseph Kalathiparambil
ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.